பதிவு செய்த நாள்
18
நவ
2014
12:11
சென்னை: கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு கோவில்களில், அய்யப்ப பக்தர்கள், மாலையணிந்து, விரதம் துவங்கினர். கார்த்திகை மாதம், திங்கட்கிழமையான நேற்று பிறந்தது. கார்த்திகை மாதத்தில், திங்கட்கிழமை மிகவும் சிறப்பான நாளாக கருதப்படும். இந்த ஆண்டு, மாதப் பிறப்பே திங்கட்கிழமையில் அமைந்தது. அதனால், நேற்று சென்னையில் பல்வேறு கோவில்களில், அய்யப்ப பக்தர்கள், 40 நாள் விரதத்திற்கான, மாலையணியும் சடங்கில் ஈடுபட்டனர்.சென்னை, மகாலிங்கபுரம், அடையாறு அய்யப்பன் கோவில்களில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று அதிகாலை முதலே, அய்யப்ப பக்தர்கள், குவிய துவங்கினர். குருசாமிகளிடம், மாலை அணிந்து தங்கள் விரதத்தை துவக்கினர். கோவில்களின் வாசல்களில், அய்யப்ப மாலை விற்கும் கடைகளில் நேற்று கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சிறுவர்கள் பலர், நேற்று முதன் முறையாக, மாலையணிந்து, அய்யப்பனை வழிபட்டனர்.