பதிவு செய்த நாள்
25
நவ
2014
11:11
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில் நடந்த கார்த்திகை ஞாயிறு தீர்த்தவாரியில், திரளான பக்தர்கள் புனித நீராடினர்.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இத்தலத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுவாமி வீதியுலாவும், தீர்த்தவாரி வைபவமும் நடைபெறும். இந்த ஆண்டு, கார்த்திகை மாத முதல் ஞாயிறையொட்டி, காலை வெள்ளி ரிஷபவாகனத்தில் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதபெருமான் சிறப்பு புஷ்பலங்காரத்திலும், வெள்ளி மூஞ்சுரு வாகனத்தில் விநாயகபெருமானும் வீதியுலா வந்தனர். பகல், 12 மணிக்கு வீதியுலா முடித்து திரும்பிய ஸ்வாமி, அம்பாள் சூரியபுஷ்கரணி முன் எழுந்தருளினர். சூரியபுஷ்கரணியில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தொடர்ந்து கட அபிஷேகமும் நடந்தது. பின், சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதே நேரத்தில், புஷ்கரணியின் நான்குபுறத்திலும், பக்தர்கள் புனித நீராடினர். பின், ஸ்வாமி- அம்பாளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் உபயதாரர் கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) புளியடி ராதாகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் உப்பிலிசீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீர்த்தவாரி ஏற்பாடுகளை, ஆலய உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்தனர்.