பதிவு செய்த நாள்
26
நவ
2014
04:11
அம்பிகையை கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் அற்புதமான விழா நவராத்திரி. சிவன், விஷ்ணு கோயில்களில் ஹோமங்கள், லட்சார்ச்சனை போன்றவை சிறப்பாக நடத்துவர். கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் இது ஆனந்த நாட்கள். மந்திர தீட்சை பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்கள் லலிதா சகஸ்ரநாமம், திரிசதி, அஷ்டோத்ரம், கட்கமாலா, கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் பாடி நெகிழும் நாட்கள் நவராத்திரி.
நவராத்திரிக்குரிய அம்பாளின் பக்தர் தான் சியாமா சாஸ்திரிகள்
சங்கீத மும்மணிகளான தியாகையர், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருமே அம்பிகையைப் பாடியுள்ளனர். தியாகையர் ராமபக்தர். முத்துசுவாமி தீட்சிதர் எல்லா தெய்வங்களையும் பாடியுள்ளார். இவரது 481 பாடல்களில் சிவனைப் பற்றி 132 பாடல்கள் பாடியுள்ளார். அதைவிட அதிகமாக அம்பாள்மீது 197 பாடல்கள் பாடியுள்ளார். எனவே அவர் தேவி உபாசகர் (ஸ்ரீவித்யா தீட்சை-உபதேசம் பெற்றவர்) என்பது ஊர்ஜிதமாகிறது.
சங்கீத மும்மணிகளும்-பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் பிறந்தவர்கள். அவர்கள் தேகத்தை நீத்த இடங்கள் வெவ்வேறு. தியாகையர் திருவையாறு; தீட்சிதர் எட்டயபுரம்; சாஸ்திரிகள் தஞ்சாவூர். மேற்கண்ட மூவருமே சமகாலத்தவர். இவர்களில் முதலில் தோன்றியவர் சியாமா சாஸ்திரிகள். அவர் தீவிர தேவி உபாசகர். தஞ்சை பங்காரு காமாட்சியைப் பூஜித்துப் பாடியவர். பிரம்மாவால் உருவாக்கப்பட்ட பங்காரு (தங்க) காமாட்சி முதலில் காஞ்சியில் இருந்தாள். அங்கிருந்து தஞ்சைக்கு எப்படி வந்தாள்? கி.பி. 16-ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அந்நியர்கள் படையெடுப்பால் கோயில்களை இடித்தல், விக்ரகங்களைக் களவாடுதல் போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெற்றன. எனவே காமாட்சியின் தங்க விக்ரகத்துக்கு புனுகு பூசி, வெளிக்கொணர்ந்தனர்.
15 ஆண்டுகள் செஞ்சியிலும், 1624-லிருந்து திருச்சி உடையார் ஜமீன்தார் பராமரிப்பில் 60 வருடங்களும், பின்னர் ஆனைக்குடியில் 15 வருடங்களும், அடுத்து நாகூர், சிக்கல், விஜயபுரத்திலும், திருவாரூர் கமலாம்பாளுடன் 70 வருடங்களும் காமாட்சி விக்ரகம் இருந்தது. 1780-ல் தஞ்சை சரபோஜி மன்னர் தஞ்சையில் கோயில்கட்டி பங்காரு காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.
காஞ்சியில் பங்காரு காமாட்சி இருந்தபோது, அவளுக்குப் பூஜை செய்ய வேதாகமத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரை ஆதிசங்கரர் நியமித்தார். அந்த பரம்பரையே இன்றும் ஆராதனை செய்துவருகிறது. அம்பாள் திருவாரூரில் இருந்த காலத்தில் அவளுக்குப் பூஜை செய்தவர் வேங்கடாத்ரி அய்யர். அவர் புதல்வரான விஸ்வநாதய்யர் வேதாகம ஜோதிட நிபுணர். காமாட்சி பக்தியில் தோய்ந்தவர். அவர் மனைவியும் தேவி பக்தை. நெடுநாள் அவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லை. ஒருநாள் விஸ்வநாதய்யர் அருகிலுள்ள வீட்டில் நிகழ்ந்த வேங்கடாசல சமாராதனைக்குச் சென்றிருந்தார். (சமாராதனை- அந்தணருக்கு உணவளித்தல்). அப்போது ஒரு பெரியவருக்கு ஆவேசம் வந்து, அடுத்த சித்திரை கிருத்திகையில் தேவிபக்த சங்கீதமணியாக ஒரு புதல்வனைப் பெறுவாய் என்று கூறினார். அதன்படியே சித்ரபானு ஆண்டு (1763), சித்திரை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
விஸ்வநாதய்யர், தங்கள் குலதெய்வம் வேங்கடேசன் என்பதாலும், வேங்கடேச சமாராதனையின்போது அருளுரைக்கப்பட்டதாலும், தனது தந்தையின் பெயர் வேங்கடாத்ரி என்பதாலும், முருகனுக்குகந்த கிருத்திகையில் பிறந்தாலும், குழந்தைக்கு வேங்கட சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். செல்லமாக சியாமா என்றழைத்தார்கள். அவருக்கு அடுத்து பிறந்தவள் மீனாட்சி. அவர்கள் வீட்டில் கிருஷ்ண விக்ரகம் உண்டு. இருவருக்குமே அந்த கிருஷ்ணரிடம் பிரியம். எனவே அவர் சியாமா கிருஷ்ணன் என்றும் அழைக்கப்பட்டார். சாஸ்திரம் அறிந்து உகந்து செய்ததால் சியாமா சாஸ்திரி என்ற பெயர் நிலைத்தது.
சியாமாவுக்கு இளம்வயதிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு. ஆனால் அவரது தந்தைக்கு அதில் சம்மதமில்லை. எனினும் தாயின் ஆதரவிலும், தேவியின் அருளாலும் அவரது சங்கீதம் வளர்ந்தது. தந்தையிடம் சமஸ்கிருதமும் தெலுங்கும் கற்றார். மாமாவிடம் சங்கீதம் பயின்றார்.
திருவாரூரிலிருந்த காமாட்சி விக்ரகத்தை தஞ்சைக்குக் கொண்டுசென்று 1780-ல் பிரதிஷ்டை செய்த சரபோஜி மன்னர், விஸ்வநாதய்யரை தஞ்சைக்கு அழைக்க, 1781-ல் சியாமா சாஸ்திரியின் குடும்பம் தஞ்சை வந்தது.
ஒருமுறை சியாமா, லலிதா சகஸ்ரநாமத்தை நன்றாக அனுபவித்து ராகமாலிகையாகப் பாடி தேவியைப் பூஜித்தார். அப்போது அங்கு வந்திருந்த மிராசுதார் ஒருவர், அதைக் கேட்டு நெகிழ்ந்து சால்வை ஒன்றை சியாமாவுக்குப் பரிசளித்தார். அந்த சால்வையை ஆர்வத்துடன் எடுத்துச் சென்று தன் மாமாவிடம் காண்பித்து விவரம் கூற, அவர் பொறாமையுடன் உனக்கா சால்வை? போடா என்று கூறி, அவருக்கு சங்கீதம் கற்றுத் தருவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் அம்பாளோ அதை வளர்ப்பதிலேயே விருப்பம் கொண்டாள்.
அந்த சமயத்தில் காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்குச் சென்றுகொண்டிருந்த சங்கீத சாமி என்ற துறவி, இடையில் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக தஞ்சை காமாட்சி கோயிலில் தங்கினார். சங்கீதம் பாடி நடனமும் செய்பவர் அவர். அவருக்கு விஸ்வநாதய்யரும் சியாமாவும் பணிவிடைகள் செய்தனர். சியாமாவின் தந்தைக்கும் மாமாவுக்கும் அவரின் சங்கீத ஈடுபாடு பிடிக்காததால், தன் தாயின் ஆலோசனைப்படி கோயில் நடைசாற்றியபிறகு காமாட்சியை குருவாக எண்ணி சங்கீதம் பாடினார் சியாமா. அதைக் கேட்ட சங்கீத சாமி மகிழ்ந்து விஸ்வநாதய்யரிடம், சியாமா மிகச்சிறந்த தேவி பக்தனாகவும், சங்கீதத்தில் சூடாமணி ரத்னமாகவும் திகழ்வான் என்று கூறி, ஆதியப்பையாவிடம் சங்கீத நுணுக்கங்களை அறியட்டும் என்றும் சொன்னார். அதன்பிறகு விஸ்வநாதய்யர் சியாமாவை கண்டிக்கவில்லை ஆதியப்பையா அரச சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வான். அவன் சியாமாவின் சங்கீதப் புலமையைப் பாராட்டி, மேலும் செம்மையுறக் கற்றுக்கொடுத்தார்.
சாஸ்திரியார் ஆஜானுபாகுவாக- காதில் கடுக்கன் அணிந்து- ஜரிகை பஞ்சகச்சம், அங்க வஸ்திரத்துடன்- விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து- அம்பாளுக்கு நிவேதனம் செய்த வெற்றிலைப் பாக்கை வாயிலிட்டுக்கொண்டு வீதியில் நடந்தால், மக்கள் வெகு மரியாதையுடன், இதோ, காமாட்சிதாசர்- சங்கீத சாகித்ய கலாநிதி போகிறார் என்று ஒதுங்கிக்கொள்வார்கள். சாஸ்திரியாரின் முதல் பாடல் சாவேரி ராகத்தில் மூன்று சரணங்களுடன் அமைந்த ஜனனி நத ஜன பாலினி பாஹிமாம் பவானி என்னும் உருக்கமான சமஸ்கிருதப் பாடல்.
சாஸ்திரியார் தியாகராஜ பாகவதருடன் கலந்து, இருவரும் தமது பாடல்களைப் பாடி ரசிப்பார்கள். சாஸ்திரியின் இரண்டாவது மகன் சுப்பராய சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதரிடம் வயலின் கற்றுக்கொண்டார், ஆக, மும்மணிகளும் சங்கீதத்தை பரஸ்பரம் வளர்த்தனர்; போற்றினர். சியாமா சாஸ்திரிகள் ஆனந்த பைரவியிலும், சாவேரி ராகத்திலும் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைச் செய்துள்ளார். அவற்றில் ஒருசில தவிர மற்றவை யாவும் அம்பாள்மீது பாடப்பட்டதே. அவர் பாடல்கள் நிறைய சரணங்கள் கொண்டவை. சங்கீதக் கச்சேரிகளில் அவர் பாடல்களைப் பாடுவது மிகக் குறைவே. எல்லா சரணங்களையும் பாடுவதென்பது அரிது.
சங்கீத சாமி சொல்லி ஆதியப்பையாவிடம் சியாமா வந்தபோது, அவர் பாடியதைக் கேட்ட ஆதியப்பையா, சியாமா, உன் வாக்கில் காமாட்சி தாண்டவமாடுகிறாளப்பா! என்றார். அப்போது ஆதியப்பையாவின் வயது 50; சியாமாவின் வயது 18. ஒருமுறை சியாமா பதறி, அபச்சாரம்- மன்னிக்கவேண்டும் என்று சொல்லி நீர்கொண்டு வந்து துடைக்க எழுந்தபோது, ஆஹா! இது அம்பாள் பிரசாதமல்லவா! என்று கண்களில் ஒத்திக்கொண்டார் ஆதியப்பையா.
பொப்பிலி கேசவய்யா என்ற சங்கீத வித்வான் இருந்தார். திறமைசாலியான அவர் ஆணவம் மிக்கவராகவும் இருந்தார். மற்ற வித்வான்களைப் போட்டிக்கழைத்து, அவர்களை வென்று தன் அடிமைகளாக்குவதில் ஆனந்தம் கண்டுவந்தார். இப்படி எங்கெங்கும் வெற்றிகொண்ட அவர் ஆணவம் தலைக்கேறி, தஞ்சைக்கு வந்து சரபோஜி மன்னரிடம் சவால்விட்டார்.
அரண்மனை ஆஸ்தான வித்வான்கள் அஞ்சினர்: சியாமாவை பாடச் சொல்லலாம் என்றார். சியாமாவுக்கு போட்டியிட விருப்பமில்லை. என்றாலும், சங்கீதமென்பது இறைவனுக்கு ஆராதனையாகப் பாடப்பட வேண்டியது. அதில் அகங்காரம் கூடாதே என்றெண்ணி போட்டிக்கு இசைந்தார். காமாட்சியை நன்கு உபசரித்து, சிந்தாமணி என்னும் அபூர்வ ராகத்தில் ப்ரோவ ஸமயமிதே (காப்பாற்ற இதுவே தருணம்) என்ற பாடலைப் பாடி, அம்பாள் குங்குமத்தை அணிந்துகொண்டு அரண்மனை சென்றார். இந்த சிறுவனா என்னுடன் போட்டியிடுவது! என்று ஏளனம் செய்தார் கேசவய்யா. போட்டி தொடங்கியது. ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பாடினர். இறுதியில் கேசவய்யா, நான் தோற்றேன்; காமாட்சியின் அருள் பெற்ற சியாமாவே வென்றார் என்று கூறி தலைகவிழ்ந்தார். மகிழ்ந்த மன்னர் சியாமாவுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதேபோல, நாகப்பட்டினம் அப்புக்குட்டி பாகவதரும் அகங்காரம் கொண்டவர். பலரையும் போட்டிக்கழைத்து அவமானப்படுத்திவந்த அவர் சியாமாவிடம் போட்டியிட்டுத் தோற்றார். அதன்பின் மைசூர் அரண்மனை சென்ற அப்புக்குட்டி பாகவதர், சியாமாவின் பாடலை அங்கு பாடி, சியாமாவின் பெருமையையும் மைசூர் மன்னரிடம் கூறினார். அதைக்கேட்ட மன்னர் மகிழ்ந்து, சியாமாவை மைசூர் வருமாறும்; அவருக்கு கனகாபிஷேகம் செய்வதாகவும் சொல்லியனுப்பினார். ஆனால் சியாமாவோ, எனக்கு அரச கனகாபிஷேகம் வேண்டாம்; கனக காமாட்சிக்கு சங்கீத அபிஷேகம் செய்யவே விரும்புகிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.
தியாகையரும் சியாமா சாஸ்திரிகளும் அதிக தலங்களுக்குச் சொல்லவில்லை. சாஸ்திரிகள் பங்காரு காமாட்சி தவிர மீனாட்சி, புதுக்கோட்டை பிரஹன்நாயகி, திருவாடி தர்மசவர்த்தனி, நாகை நீலாயதாட்சி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆகியோரைப் பற்றிதான் பாடியுள்ளார். ஒருசமயம் புதுக்கோட்டை பிரஹன் நாயகிமீது பாடியபோது, பெரியவர் ஒருவர், மதுரை மீனாட்சியைப் பாடி அருள்பெறுவாய் என்று ஆசீர்வதித்தார். மீனாட்சி பற்றி ஏழு பாடல்கள் இயற்றிய நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் செய்துகொண்டு மதுரைபோய் நவரத்ன மாலையாகப் பாடுவோம் என்று எண்ணியிருந்தார் சாஸ்திரியார். அப்போது அந்தப் பெரியவர் சாஸ்திரியின் கனவில் வந்து, இன்னுமா மதுரை செல்லவில்லை? என்று கேட்டார். வியந்த சாஸ்திரிகள் மறுநாளே மீதமிருந்த இரண்டு பாடல்களை இயற்றி மதுரை சென்று அம்பிகைமுன் நவரத்னமாலையாகப் பாடினார். மகிழ்ந்த அர்ச்சகர் பரிவட்டம் கட்டி சாஸ்திரியை உபசரித்தார். செல்வந்தரான ரசிகர் ஒருவர் யாளிமுக தம்புராவைப் பரிசளித்தார்.
சாஸ்திரியாரின் மனைவி மகாஉத்தமி. காமாட்சியிடம் வேண்டிக்கொண்டு மஞ்சள் குங்குமத்துடன் சுமங்கலியாய் இவ்வுலக வாழ்வை நீத்தார். துக்கம் விசாரிக்க வந்த ஒருவரிடம் சாஸ்திரியார் சிலேடையாக, அவ சாக அஞ்சி நாள்; செத்து ஆறு நாள் என்றார். வந்தவருக்கு அவர் சொன்னது புரியவில்லை. மனைவி இறந்த ஆறாம் நாள் தன் மகனின் மடிமீது தலைவைத்துப் படுத்தபடி சிவேபாஹி காமாக்ஷி பரதேவதே என்றுகூறி, தை மாதம் சுக்ல தசமியன்று (1827) அம்பிகையின் தாள்சேர்ந்தார். கிரகஸ்தர் என்பதால் சமாதி கிடையாது. காமாட்சி அருளாளர் சியாமா சாஸ்திரிகளின் உருக்கமான பாடல்களைப் பணிந்து பாடி தேவியருள் பெறுவோம். சங்கீதம் தெரியாதவர்கள் அவர் பாடலை துதிபோல சொல்லி நெகிழலாம்.