சபரிமலை கற்கண்டு தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட அரவணை உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. வெளிமார்க்கெட்டில் தேவசம்போர்டு நேரடியாக கற்கண்டு கொள்முதல் செய்து வருகிறது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதங்களில் ஒன்று அரவணை. இதில் சேர்க்கப்படம் சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், சுக்கு போன்ற பொருட்கள் காண்டிராக்ட் முறையில் பெறப்படுகிறது. இந்த முறையில் கற்கண்டு சப்ளை செய்யும் குத்தகை உரிமம், குமுளி ஹைரேஞ்ச் மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பரிந்துரை படி கற்கண்டு இவர்கள் சப்ளை செய்யவில்லை. ஸ்டோரில் இருந்த கற்கண்டு தீர்ந்து விட்ட நிலையில் அரவணை உற்பத்தி கடந்த 24-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேவசம்போர்டு மார்க்கெட்டில் நேரடியாக கற்கண்டு கொள்முதல் செய்ய முடிவெடுத்தது. அதன்படி தேவசம்போர்டு அதிகாரிகள் நேரடியாக கடைகளில் கற்கண்டு விலைக்கு வாங்கி பம்பை கொண்டு வரப்பட்டது. அவை டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் அரவணை உற்பத்தி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே 25 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்து ஸ்டாக் செய்யப்பட்டதால் பிரசாதம் வழங்குவதில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.