பதிவு செய்த நாள்
01
டிச
2014
12:12
சபரிமலை:சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால், வருமானம் 13 நாட்களில் ரூ.44 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.9 கோடி ரூபாய் அதிகமாகும்.
சபரிமலையில் மண்டல காலம் தொடங்கிய நவ.17 முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தேவசம்போர்டுக்கு வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. நவ.29ம் தேதி வரை சபரிமலை வருமானம் 44 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 503 ரூபாய். கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.35 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு காணிக்கை ரூ.16.48 கோடி, அரவணை விற்பனை ரூ.18.17 கோடி, அப்பம் விற்பனை ரூ.3.84 கோடி, அபிஷேகம் ரூ. 49 லட்சம் என கிடைத்துள்ளது என தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:
சபரிமலை மற்றும் பம்பையில் நடைபெறும் அன்னதானம் பந்தளம் மற்றும் எருமேலியிக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பந்தளத்தில் காலை 7.30-க்கு உப்புமா, மதியம் 12 -க்கு சாப்பாடு, இரவு 7.30-க்கு கஞ்சி வழங்கப்படும். எருமேலியில் காலை 11 மணி முதல் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் சேர்த்த கஞ்சி வழங்கப்படும். மலையேறும் பக்தர்களுக்கு உடல் உற்சாகத்தை ஏற்படுத்த இதுஉதவும். மாலை 6.30 முதல் கஞ்சி, பயறு, ஊறுகாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் நேற்று உச்சபூஜைக்கு முன்னோடியாக நடைபெற்ற களபூஜைக்காக,
தந்திரி கண்டரரு ராஜீவரரு களபகலசத்துக்கு கோவில் மண்டபத்தில் பூஜை
நடத்தினார்.