சபரிமலை:பஸ்மக்குளத்தில் தண்ணீரை பரிசோதித்து தேவைப்பட்டால் தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசம்போர்டு செயலரும், சபரிமலை திருவிழா முதன்மை ஒருங்கிணைப்பாளருமான ஜோதிலால் கூறினார். சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் பார்லர்களில் டாக்டர்கள் நியமிக்கப்படுவர். பக்தர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடையை சமாளிக்க கூடுதல் ஜெனரேட்டர் வசதி செய்யப்படும்.
பி.எஸ்.என்.எல்., கவரேஜை விரிவுபடுத்த டியூயல் பாண்ட் ஆன்டனா அமைக்கப்படும். பேக்கிங் செய்த உணவு பொட்டலங்கள் விற்கும் இடங்களில் தர்பூசணி போன்றவை விற்பது தடை செய்யப்படும். பக்தர்களிடம் அதிக விலை வசூலிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்மக்குளத்தில் தண்ணீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தேவைப்பட்டால் தற்போதுள்ள தண்ணீர் மாற்றப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்படும். சபரிமலைக்கு வரும் கேரள அரசு பஸ்களின் சர்வீஸ்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.