பதிவு செய்த நாள்
01
டிச
2014
01:12
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 96ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 96ம் ஆண்டு ஜெயந்தியின் முதல் நாள் விழா நேற்று நடந்தது. காலை 6:30 மணிக்கு பிரதான் மந்திரில், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சுவாமியின் மூலமந்திரங்கள், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. மூலவருக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. 10:30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலை 4:00 மணிக்கு கனகா, டாக்டர் சுப்பிரமணியத்தின் பரதநாட்டியம், 6:00 மணிக்கு பி.சுவாமிநாதன் எழுதிய பகவானுடனான பக்தர்களின் அனுபவங்கள் என்ற நுாலை, இந்துசமய அறநிலையத் துறை சிறப்பு செயலாளர் கண்ணன் ஐ.ஏ.எஸ்., வெளியிட, ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் ஸ்ரீபாலாஜி பெற்றுக் கொண்டார். பகவானின் வீடியோ பதிவை, இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு செயலாளர் கண்ணன் வெளியிட, பக்தர் குமரன் பெற்றுக் கொண்டார். இன்று 1ம் தேதி காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜை நடக்கிறது. 11:00 மணிக்கு விழா அரங்கில் பக்தர்கள் பஜனை, மாலை 4:00 மணிக்கு சென்னை சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீமதி பங்கஜம்தாஸ் மற்றும் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.