சபரிமலை தேவஸ்தானம் திருப்பி அனுப்பிய 750 மூடைகள் அரிசியால் சர்ச்சை..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2014 02:12
திருநெல்வேலி : சபரிமலைக்கு அனுப்பிய தரம் குறைந்த அரிசியை மீண்டும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களின் அன்னதானம் உள்ளிட்ட தேவைகளுக்காக 750 மூடை அரிசி இரண்டு லாரிகளில் அனுப்பப்பட்டது. சபரிமலை,பம்பையில் அரிசியை, அங்குள்ள உணவுபாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தபோது, அரிசியில் வண்டுகள், பூச்சிகள் இருப்பதும், மிகவும் தரம் குறைந்தது எனவும் மக்கள் உணவாக உட்கொள்ள முடியாது எனவும் சான்றளித்தனர். எனவேஅரிசி மூடைகளை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர். கேரள உணவுபாதுகாப்பு துறை, இது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு கமிஷனருக்கு இமெயிலில் தகவல் அனுப்பியது. நெல்லை மாவட்ட உணவுபாதுகாப்பு அலுவலருக்கும் தகவல் தெரிவித்து, அந்த அரிசியை மக்களுக்கு விற்பனை செய்யாதவாறு கண்காணித்து முழுமையாக அழிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அரிசி மூடைகள், விற்பனை செய்த நிறுவனத்திற்கே சென்றுசேர்ந்துள்ளது. உணவுபாதுகாப்பு அலுவலர்கள் அந்த அரிசி மூடைகளில் ஒன்றிரண்டை கொட்டி அழித்தனர். மீதமுள்ள அனைத்தையும் அந்த வியாபாரியிடமே திருப்பி கொடுத்தனர். அரிசி மூடைகள் கோழிபண்ணைக்கு தீவனமாக அனுப்பப்பட்டதாக கூறி கணக்கை முடித்தனர். ஆனால் அரிசி உண்மையிலேயே கோழிதீவனத்திற்கு அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தரம்குறைந்த அரிசியை உணவாக உட்கொள்ள கூடாது என கேரள அதிகாரிகள் தமிழக மக்கள் மீது காட்டிய பரிவை கூட தமிழக அதிகாரிகள் காட்டவில்லை. தற்போது அந்த அரிசி எங்கெங்கே விற்பனைக்கு சென்றிருக்கிறது என்பது பீதியும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாகரன் கூறுகையில், பாவூர்சத்திரம் ஆலையிடம் இருந்து கேரளாவில் ஒரு ஏஜன்சியினர் அரிசி கொள்முதல் செய்தனர். அவர்கள் 11 மாதங்கள் இருப்பு வைத்து தாமதமாக சபரிமலை ஐயப்ப தேவஸ்தானத்திற்கு வழங்கினர். இதனால் அரிசியில் வண்டுகள் ஏற்பட்டு திருப்பி அனுப்பிவிட்டனர். எங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். எனவே அவற்றில் ஒன்றிரண்டை மூடைகளை அழித்துவிட்டோம். மீதத்தை கோழிப்பண்ணைக்கு கொடுத்துவிட்டோம் என்றார். நெல்லையில் அண்மையில் ரூ 20 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா போன்றவற்றை அழித்ததாக கூறி மீண்டும் வியாபாரிக்கே கொடுத்ததை போல தற்போதும் கேரளாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அரிசி என்ன ஆனது என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.