பதிவு செய்த நாள்
03
டிச
2014
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும் 5ம் தேதி, கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு, பச்சரிசி மலையில், 300 கிலோ நெய் ஊற்றி, மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் உற்சவ பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஆண்டுதோறும் கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. அந்த வகையில், வரும் 5ம் தேதி, கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஊர்வலமாக கோவிலின் கிழக்கு புறம் வருவார். அப்போது, அங்கு செக்குபனை யில் (பனை மரத்தில்) நெய் தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலைக்கோவில் எதிரே உள்ள பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 300 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீட்டர் நீளமுள்ள திரி மூலம் நெய் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, திருத்தணி நகரம் முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். பச்சரிசி மலையில் மூன்று நாட்கள் தீபம் தொடர்ந்து எரியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.