சபரிமலையில் பிளாஸ்டிக்கை தவிர்க்க வாகனங்களில் கடும் சோதனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2014 12:12
சபரிமலை: சபரிமலை காடுகளுக்கு பெரும் சவாலாக உள்ள பிளாஸ்டிக் குப்பையை குறைக்க வனத்துறை பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக சபரிமலை வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்து, பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் துணிப்பைகள் வழங்குகின்றனர்.
சபரிமலை பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதி. இங்கு நாள் தோறும் பெருகி வரும் பிளாஸ்டிக் குப்பைகள் சபரிமலை சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ளது. பக்தர்களின் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் வரவேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக அவல், பொரி, கற்கண்டு போன்ற பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வராமல் இலை அல்லது பேப்பர் பேக்கிங்கில் கொண்டு வரலாம். தேவையற்ற பொருட்களை சபரிமலையில் வீசி எறிவதற்கு பதிலாக ஊருக்கே திரும்பி கொண்டு செல்லலாம் என தேவசம்போர்டு ஆலோசனை தெரிவித்துள்ளது. எத்தனை தான் வேண்டுகோள் விடுத்தாலும் தினமும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிவதை தவிர்க்க முடியவில்லை.. பக்தர்கள் வீசி எறியும் பிளாஸ்டிக் கவர்களை தின்னும் வனவிலங்குகள் செத்து மடிகிறது. இதையடுத்து வனத்துறை சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சபரிமலை பாதைகளில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அழித்து வருகிறது. பத்தனந்திட்டை பம்பை, எருமேலி பம்பை ரோடுகளில் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பெற்று துணிப்பைகளை வழங்குகின்றனர். பக்தர்கள் முழுமையாக பிளாஸ்டிக்கை தவிர்த்தால்தான் சபரிமலை காடுகளை பாதுகாக்க முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.