பதிவு செய்த நாள்
03
டிச
2014
12:12
சென்னை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு, 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 10 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன என, 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில், மகா தீபத் திருவிழா, இம்மாதம், 5ம் தேதி நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இது குறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை மைய, விழிப்புணர்வு அலுவலர் பிரபுதாஸ் கூறியதாவது: கிரிவல பாதையின் முக்கிய சந்திப்புகளில், 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும். 10 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஈடுபடுவர். இவர்களிடம், அவசர உதவிக்கான எல்லா மருத்துகளும் இருக்கும். 50 கல்லூரி மாணவ, மாணவியரும் தன்னார்வ குழுவில் ஈடுபடுவர். இவர்களை, தனியாக அடையாளம் தெரிய, சீருடை, ஒளிரும் மேலாடை அணிந்திருப்பர். தகவல் பரிமாற்றத்துக்கு, வாக்கி டாக்கி பயன்படுத்தப்படும். மலையிலும், ஒரு மருத்துவக்குழு செயல்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கவனமா இருங்க...: மூச்சுத் திணறல், இதய நோய் மற்றும் உடல் பலவீனம் உள்ளவர்கள், மருத்து ஆலோசனை பெற்ற பிறகே, மலையில் ஏற வேண்டும்; இல்லாவிட்டால், பயணத்தை தவிர்க்கலாம். தினமும் உட்கொள்ளும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். தினசரி உட்கொள்ளும் மருந்துகளை, மறக்காமல் கையில் எடுத்துச் செல்லுங்கள்.