Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பாவாஜி
பாவாஜி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 டிச
2014
18:08

வட இந்தியாவில் அயோத்தியில் வசித்து வந்தவர் ஹதிராம் என்பவர். இவரது குடும்பப் பெயர் பாவாஜி எனவே ஹதிராம் பாவாஜி என்று இவரை அழைப்பர். நாம் இவரை பாவாஜி என்றே பார்ப்போம். வடக்கே பிறந்து வளர்ந்திருந்தாலும், தென்னாட்டில் உள்ள திருப்பதி ஏழுமலையான் மீது தீவிர பக்தி கொண்டவராக இவர் விளங்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் ஆச்சரியமான தகவல். தற்போது நீங்கள் படிக்கக் கூடிய இந்த சம்பவம் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

அயோத்தியில் வசித்து வந்த காலத்திலேயே திருமலையில் குடி கொண்ட பாலாஜி பற்றிப் பலரும் சொல்லக் கேட்டு அறிந்தார் பாவாஜி. அந்த நேரம் பார்த்து பாவாஜியின் நண்பர் ஒருவர் அயோத்தியில் இருந்து திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பி இருந்தார். பாவாஜியின் பக்தியை அறிந்த அந்த நண்பர். அவரது வீட்டுக்குப் போய் திருப்பதி பாலாஜியின் பிரசாதத்தையும்,  பாலாஜியின் உருவப்படம் ஒன்றையும் பாவாஜிக்குக் கொடுத்தார். இதில் பெரிதும் மகிழ்ந்த பாவாஜி பிரசாதத்தை மிகுந்த சிரத்தையுடன் உட்கொண்டு. பாலாஜியின் திருவுருவப் படத்தை பூஜையறையில் வைத்து தினமும் புஷ்பங்களால் அலங்கரித்து வழிபட்டு வந்தார்.

இதன் பலனாக விரைவில் திருமலைக்குச் சென்று பாலாஜியைத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் கூடியது பாவாஜிக்கு. இதற்கான பிரார்த்தனைøயும் பாலாஜியிடமே வைத்தார். பிரார்த்தனை நிறைவேறும் ஒரு தினமும் வந்தது. ஆம்! ஒரு நல்ல நாளில் அயோத்தியில் இருந்து திருமலை திருப்பதிக்குயாத்திரை புறப்பட்டார் பாவாஜி. பல மாதங்கள் நடையாய் நடந்து. திருமலையை வந்தடைந்தார். பாலாஜியின் அழகு வடிவத்தை நேருக்கு நேராகப் பார்த்ததும் தன்னை இழந்தார். அயோத்திக்குத் திரும்ப வேண்டும் என்பதை மறந்தார்.

திருமலையின் காட்டுப் பகுதியில் ஒரு குடில் அமைத்து நிரந்தரமாக அங்கேயே தங்கினார். தினமும் வேங்கடவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள திருக்குளத்தில் நீராடி, ஏழுமலையானின் தரிசனம் பெற்றார். தினமும் மூன்று வேளை குளித்து ஏழுமலையானை தரிசிப்பது அவரது வாடிக்கையாக இருந்தது.

தான் ஒய்வாக இருக்கும் வேளையில் தாயம் விளையாடுவது பாவாஜியின் வழக்கம். தாயம் விளையாடுவதற்குக் குறைந்தபட்சம் இருவர் வேண்டுமே! எனவே, தனக்கு எதிரில் சாட்சாத் பாலாஜியே அமர்ந்து விளையாடுவது போல் கற்பனை செய்து அவருக்காவும் இவரே தாயக்கட்டைகளை உருட்டி விளையாடுவார். என்றைக்கேனும் ஒரு நாள் என்னுடன் வந்து தாயம் விளையாட வேண்டும் என்று திருமலை பாலாஜியிடம் ஒரு கோரிக்கையும் வைத்திருந்தார். ஒரு நாள் வழக்கம்போல் பாவாஜி தனியே அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிரில் சங்கு சக்ரதாரியாக சாட்சாத் பாலாஜியே எழுந்தருளினார். பாலாஜி.... உன்னுடன் தாயம் விளையாட வந்திருக்கிறேன் என்று சொல்ல.... பாவாஜி மெய்சிலிர்த்துப் போனார். தரையில் விழுந்து அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பின், பாலாஜியை ஆசுவாசப்படுத்தி, அவருக்குப் பழங்கள் அளித்து, விசிறி விட்டார். பாவாஜி நைவேத்தியங்களை அவருக்கு சமர்ப்பித்தார். அதன் பின் இருவரும் தாயம் விளையாடத்  தொடங்கினார்கள். தான் இங்கே வந்து நெடு நேரமாகி விட்டது என்று பாலாஜி கருதினால், பொசுக்கென்று அங்கிருந்து ஆலயத்துக்குக் கிளம்பி விடுவார். இது வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் பாலாஜியும் பாவாஜியும் தாயம் விளையாடக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே இருவருக்கும் தெரியவில்லை. பொழுது விடிந்து. திருமலையில் சுப்ரபாத சேவைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தான் இங்கே வெகு நேரமாக அமர்ந்து தாயம் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதை பாலாஜி அப்போதுதான் உணர்ந்தார். சட்டென்று எழுந்தார். வருகிறேன் பாவாஜி..... எனக்காக பக்தர்களும் பணியாளர்களும் அர்ச்சகர்களும் காத்திருப்பார்கள். நேரம் போனதே தெரியவில்லை. இன்று இரவு மீண்டும் வருகிறேன் என்று சொல்லி விட்டு க்ஷணப் பொழுதில் மறைந்து போனார்.

மறைவதற்கு முன் தன் கழுத்தில் அணிந்திருந்த விலை உயர்ந்த ஒரு வைர மாலையை பாவாஜியின் இல்லத்தில் வேண்டுமேன்றே விட்டு விட்டுப் போனார். பாலாஜி திருவிளையாடல்களை எல்லா தெய்வங்களும் இப்படித்தானே துவங்கும்! பக்தனின் மீது பழிச் சொல்லை ஏற்படுத்தி விட்டு, அவனது மன நிலையை அளப்பதுதானே தெய்வங்களின் பொழுதுபோக்கு!

பாலாஜி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வைர மாலையைக் கவனித்த பாவாஜி பதறிப் போனார். போகிற அவசரத்தில் பெருமாள் கவனிக்காமல் இதை விட்டு விட்டுப் புறப்பட்டுப் போயிருக்கிறார் என்று தீர்மானித்து, அந்த மாலையுடன் வேங்கடவன் ஆலயம் நோக்கி விரைந்தார். ஆலயத்துக்குள் இவர் காலடி எடுத்து வைத்தபோது அங்கே பெரும் களேபரம். பெருமாளின் கழுத்தில் இருந்த வைர மாலையை எடுத்தது யார் என்று காரசாரமாக விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது வைர மாலையுடன் கோயிலுக்குள் நுழைந்த பாவாஜியைப் பார்த்த ஊழியர் ஒருவர் இதோ, வைர மாலையைத் திருடிய ஆசாமியே அதைக் கொண்டு வருகிறார். என்று ஆலயத்தில் உள்ள அதிகாரிகளைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.

அவ்வளவுதான்..... அடுத்த நிமிடம், பிடியுங்கள் அவனை. அவன்தான் திருடன் என்று வெவ்வேறு திசைகளில் இருந்து கூக்குரல்கள் எழுந்தன. பாவாஜி சுற்றி வளைக்கப்பட்டார். என்ன தைரியம் இருந்தால் பெருமாளின் வைர மாலையையே திருடுவாய்? என்று ஆளாளுக்கு  அவரிடம் கோபம் பொங்க கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அதில் ஒரு சில ஊழியர்கள் ஆத்திரம் மேலிட பாவாஜியை அடிக்கவும் செய்தனர். துடித்துப் போனார் பாவாஜி.

அடிப்பட்ட தன் உடலைத் தடவியவாறு. இல்லை. நான் திருடவில்லை. தினமும் இரவில் என் குடிலுக்கு தாயம் விளையாட பாலாஜி வருவார். அப்படி நேற்று இரவு வந்த பெருமாள் தான் கிளம்பிச் செல்கிறபோது இந்த வைர மாலையை மறந்து விட்டுப் போயிருக்கிறார். அதைக் கொடுத்துவிட்டுப் போகவே வந்தேன். நான் திருடன் இல்லை. என்னை நம்புங்கள். என்றார் பாவாஜி.

பாலாஜி என்னுடன் தாயம் விளையாடுவார் என்று பாவாஜி சொன்னதை எவருமே நம்பத் தயாரில்லை. அதுவரை கோபத்தில் இருந்த அனைவரும் இப்போது கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள், என்றாலும், தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். பாவாஜி.

இறுதியில் இந்த வழக்கு மன்னரிடம் போனது. அவரிடமும் இதே விஷயத்தைச் சொன்னார் பாவாஜி. அப்போது மன்னர். நீ சொல்வது உண்மை என்றால் உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் தேர்வாகி விட்டால். பெருமாள் உன் குடிலுக்கு வந்து தாயம் விளையாடுவார் என்பதை ஓப்புக்கொள்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரு அறைக்குள் பாவாஜியை வைத்துப் பூட்டினார். கூடவே ஒரு வண்டி நிறைய கரும்புகள் உள்ளே வைக்கப்பட்டன. விடிவதற்குள் இந்தக் கரும்புகள் அனைத்தையும் ஒன்று விடாமல் தின்று தீர்க்கப்பட வேண்டும். இதுதான் பாவாஜிக்கு வைக்கப்பட்ட சோதனை.

பாலாஜியை மனதுக்குள் நினைத்து, உண்மையைச் சொன்ன எனக்கு இப்படி ஒரு தண்டனையா? இவற்றை எல்லாம் நீ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாயா? ஒரு வண்டிக் கரும்பை விடிவதற்குள் தின்று தீர்ப்பதற்கு நான் என்ன யானையா? என்று பாவாஜி மருகியபோது அவரை ஒரு மயக்கம் ஆட்கொண்டது. அப்படியே தரையில் சரிந்தார்.

அந்த வேளையில் சாட்சாத் பாலாஜியே யானை வடிவில் அறைக்குள் தோன்றினார். கரும்புக் கட்டுகள் அனைத்தையும் மளமளவெனத் தின்று தீர்த்தார். எல்லாம் முடிந்த பின் தன் பிளிறல் ஓசையைக் கிளப்பினார். அலறி எழுந்தார் பாவாஜி. பூட்டிய அறைக்குள் யானை இருப்பதையும், கரும்புகள் காலியானது குறித்தும் யோசித்துபோது- அந்த யானை சாட்சாத் பாலாஜியாக ஒரு விநாடி அவருக்குக் காட்சி கொடுத்தது, என்னைக் காப்பாற்ற வந்து விட்டாயா பாலாஜி...... என்று அந்த யானைக்கு நமஸ்காரம் செய்தார்.

பிளிறல் சத்தம் கேட்டு அரண்மனைக் காவலர்கள் அலறியடித்து வந்தனர். பூட்டிய அறைக்குள் யானையைப் பார்த்து வியந்தனர். அறையைத் திறந்தனர். ஒரு வண்டி நிறைய உள்ளே வைக்கப்பட்ட கரும்புக் கட்டுகள் அங்கே மாயமாகிப் போனதையும் கண்டனர். அதற்குள் யானை வெளியே ஓடி மறைந்தது, பிறகுதான், பாவாஜியின் மகிமையும், சாட்சாத் பெருமாளே யானையாக வந்ததையும் அவர்கள் உணர்ந்து கொண்டு அதிசயித்தனர்.

விடிந்தும் விடியாத பொழுதில் மன்னரிடம் போய் காவலர்கள் விவரத்தைச் சொல்ல.... அவரும் ஓடி வந்து பாவாஜியின் கால்களில் விழுந்தார். தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். பாவாஜியின் பெருமை அதன் பிறகுதான் அனைவருக்கும் புரிந்தது.

பிறகு, மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க திருமலை திருப்பதி ஆலய நிர்வாகத்தை பாவாஜி ஏற்றுக்கொண்டார். அன்றைய தினத்தில் இருந்து திருமலை திருப்பதி கோயிலின் தலைமை அதிகாரியாக பாவாஜி பொறுப்பேற்று திறம்பட பணி புரிந்து வந்தார். சில காலம் கழிந்த பின் பாலாஜியின் திருவடிகளில் கலந்தார். பாவாஜியின் மறைவுக்குப் பிறகும் இந்த மடத்தைச் சேர்ந்த வட இந்தியர்களே திருமலை ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தனர். இந்த நிலை கி.பி.1933-ஆம் ஆண்டு வரை நீடித்தது. அதன் பின் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையான் ஆலயத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

பாவாஜியின் மடம் இன்றைக்கும் திருமலையில் இருந்து வருகிறது. பாலாஜியும் பாவாஜியும் தாயம் விளையாடிய மண்டபம்-அதாவது பாவாஜி தான் வசிப்பதற்காக அமைந்த குடில் பகுதி இன்றைக்கும் மலை உச்சியில் இருக்கிறது.

திருமலையில் இருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியில் அமைந்துள்ள வேணுகோபால் ஸ்வாமி கோயிலுக்கு அருகில் பாவாஜியின் மடமும் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. பாவாஜியின் நினைவாக திருமலையில் கோயிலுக்குத் தென்புறம் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

திருப்பதிக்குச் செல்வோர் அற்புதமான இந்த மகானின் ஜீவ சமாதியையும் தரிசித்துத் திரும்ப வேண்டும். திருப்பதி பெருமாளின் அன்புக்கும் ஆசிக்கும் ஆட்பட்டு அவரது தோழராக அல்லவா விளங்கி வந்திருக்கிறார் பாவாஜி! அவருக்கு நமது நமஸ்காரம்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.