கீழக்கரை, மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற சிவஸ்தலமான உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரிதாயார் கோயிலில் உள்ள பச்சைமரகத நடராஜர் சன்னதி உலகப்பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுக்குஒருமுறை மரகத நடராஜருக்கு ஜன., 4 அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பூசப்பட்ட சந்தனக்காப்பு களையப்பட்டு, காலை 11 மணிக்கு மேல் மூலவருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை சிறப்பு மற்றும் தர்ம தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அவ்வேளையில் திருமுறை பாராயணம் ஓதுதல் நடைபெறும். கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபத்தில்எழுந்தருள, இரவு 10 மணிக்கு மேல் மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நிறைவேற்றப்படும்.மறுநாள்( ஜன. 5 ) திங்கள் அன்று அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி சேதுபதி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி ஆலோசனையின் பேரில் திவான் மகேந்திரன், சரக பொறுப்பாளர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் செய்துவருகின்றனர்.