பதிவு செய்த நாள்
30
டிச
2014
12:12
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அன்னதான திட்டத்தில், உணவுகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான, 26 திருக்கோவில்களில், மதிய நேரத்தில் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றாடம் வழங்கப்படும் உணவில், சாப்பாடு, ரசம், பொறியல், அவியல், அப்பளம், மோர், பாயாசம் ஆகியவை வழங்கப்படுகிறது.கோவிலுக்கு மதிய நேரத்தில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், உணவு பரிமாறப்படுகிறது.சில கோவில்களில் உணவு சமைக்கும் கூடங்கள் சரியாக இல்லை; போதுமான மளிகைப் பொருட்களை கொண்டு சரியாக உணவு சமைப்பதில்லை; அப்படியே சமைத்தாலும், அந்த உணவு சுவையாக இல்லை; சில கோவில்களில் உணவே சமைப்பதில்லை என்று என்று புகார் வந்தது. இதையடுத்து, இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபால் உத்தரவின்படி, நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோனியம்மன் கோவிலில் கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் உதவி கமிஷனர் ஜீவானந்தம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் பேரூர் கோவில் உதவி கமிஷனர் கார்த்திக் என்று ஒவ்வொரு கோவிலிலும், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.