சோமாஸ்கந்தர் வடிவம் விநாயகர் இல்லாமல், முருகனை மட்டும் சிவனும், பார்வதியும் கொஞ்சி மகிழும் காட்சியாகும். பாலமுருகன் உலகைச் சுற்றி வந்த பிறகும், அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தை தரும் பழம் என்பதால், அந்த ஞானப்பண்டிதன் அதுபோன்ற மற்றொரு பழத்தை பெற வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார். ஒருமுறை தன் தந்தையிடம் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் கழுத்தில் உருண்டையாக தங்கியிருக்கும் ஆலகால விஷத்தைக் கேட்டு அடம்பிடித்தார். சிவன் அது விஷம் என்று எடுத்துக்கூறியும், குழந்தை முருகன் கேட்கவில்லை. தந்தையின் கழுத்தை பிடித்து இழுத்து, விஷ உருண்டையை வெளியே கொண்டு வர முயற்சித்தார். சிவன் குழந்தையின் பிடி தாங்காமல் மூச்சு திணறினார். அவரை அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி, முருகனை தன் மடியில் இருத்தி ஞானப்பால் ஊட்டி அமைதிப்படுத்தினாள் பார்வதிதேவி. பின்பு அவரைச் சமாதானப்படுத்தும் வகையில், பாலமுருகனை அன்னையின் வலது தொடையில் இருத்தி, சமாதானம் செய்தார். இதுவே சோமாஸ்கந்தர் வடிவமாயிற்று. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இந்த வடிவத்தை காணலாம்.