திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசனம்; மூன்று மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2015 03:01
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு நடை திறப்பு: முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதணை நடந்தது. மற்ற கால வேளை பூஜைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடந்தது. புத்தாண்டு தினம் என்பதால் பல இடங்களில் இருந்து முருக பக்தர்கள் விரதம் இருந்து நடை பயணமாக கோயிலுக்கு வருகை தந்தனர். சில பக்தர்கள் முகனின் ரதம் இழுத்து வந்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நள்ளிரவே கோயிலில் குவியத் தொடங்கினர்.
3 மணிநேரம் காத்திருப்பு: அதிகாலையில் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்டம் இரவு வரை நீடித்ததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிகமிருந்ததால் சிறப்பு பஸ்கள் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்பட்டன.
இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர்வி.பி.ஜெயக்குமார் தலைமையில், கோயில் நுழைவு வாயில் முன்பு( டிச., 31) நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கோயில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு கோயில் ஆகம விதிகளுக்கு எதிரானது, என கோஷம் எழுப்பினர். போலீசார் சமரசம் செய்த பின்பு நள்ளிரவு 12 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.