புத்தாண்டு மிக கோலாகலமாய் பிறந்து விட்டது. மழையும் குளிருமாய், மார்கழி பனியுடன், 20௦15ல் காலடி எடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டிலாவது, சென்னையின் நீர் நிலைகளை காப்போம்; விபத்து இல்லாத நகரமாக சென்னையை உருவாக்குவோம்; குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெற முயற்சி மேற்கொள்வோம் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை சென்னைவாசிகள் எடுத்து கொள்ளலாம். ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை, இந்த ஆண்டிலாவது முடிக்க வேண்டும்; அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஒன்றே ஒன்றாவது கட்ட வேண்டும்; குடிநீரீல் கழிவுநீர் கழிப்பதை எப்படியாவது தடுக்க வேண்டும்; விரிவாக்க பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; குடிநீர் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை, மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் மேற்கொள்ளலாம். சென்னையில் எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுமானால், இரு கைகளும் இணைந்து ஓசை எழுப்பினால் தானே சாத்தியம்!