பதிவு செய்த நாள்
07
ஜன
2015
04:01
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களும், கடவுள் தன்னைப் போல்தான் இருப்பார் என்று நினைக்கும். தெய்வமும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அந்தந்த உயிர்களுக்குத் தக்கவாறு, அதனதன் உருவத்துடனேயே காட்சி தருகிறார். உதாரணமாக, குறுக்கே வளரும் தன்மையைக் கொண்ட ஆடு, மாடு போன்ற மிருகமானது, தன்னைப் போலவே (மிருக வடிவத்திலேயே) கடவுளின் வடிவம் இருக்கும் என்று நினைக்கும். கடவுளும், அதன் விருப்பத்தை நிறைவேற்ற மிருக வடிவமாகவே காட்சி தருவார். பறவைகளுக்குப் பறவையாகவும், மீன்களுக்கு மீனாகவும், புழுக்களுக்குப் புழுவாகவும் காட்சிதரும் தெய்வம், மனிதனுக்கும் கை, கால், கண், காது முதலானவைகளுடன் மனிதனைப் போலவே காட்சி தருகிறார். ஆனாலும், சிவன், விஷ்ணு, பிரம்மா, அம்மன், முருகன், போன்று பல்வேறு பெயர்களில் மனித வடிவில் காட்சி தந்தாலும்கூட, தெய்வமானது தனக்கே உரிய ஒரு சில தன்மைகளை இழக்காது. அப்படி தெய்வத்துக்கென்றே உண்டான தனியொரு தன்மைதான் மனிதனுக்கும் இல்லாத மூன்றாவது கண் என்பது. இரண்டு கண்களுக்கு நடுவில், புருவங்களுக்கு இடையே சற்று மேற்பகுதியில் அமைந்ததே நெற்றிக்கண்.
தெய்வமும், இந்த மூன்றாவதுக் கண்ணை உபயோகித்து ஒருசில செயல்களைச் செய்வதால் அந்த மூன்றாவது கண்ணின் பெருமை பக்தர்களால் உணரப்படுகிறது. உதாரணமாக, பரமசிவன் நெற்றியில் அமைந்த மூன்றாவது கண்ணைக் கொண்டுதான் தவறான எண்ணத்துடன் தன்னை நெருங்கிய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். இதைத்தான் தெய்வப்புலவர் நக்கீரரும், மதுரையம்பதியில், மீனாட்சி சுந்தரேசுவரரைப் பார்த்து, முக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று எடுத்துரைத்தார். ஆக, சிவனுக்கு மூன்றாவது கண் உண்டு என்பது தெரிகிறது.
இதைப்போலவே அம்மனுக்கும் மூன்றாவதாக ஓர் கண் உண்டு என்பதை லலிதா ஸஹஸ்ரநாமத்தின் துவக்கத்தில் கூறப்படும் ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம் என்னும் தியான சுலோகம் வெளிப்படுத்துகிறது. முத்கல புராணமோ, ஹஸ்தீந்ராநந மிந்து சூட மருணச்சாயம் த்ரிநேத்ரம் என்பதாக யானை முகத்துடனும், தலையில் சந்திரனுடனும், நெற்றியில் மூன்றாவது கண்ணுடனும் விநாயகர் விளங்குகிறார் என்பதாக விநாயகப் பெருமானுக்கும் மூன்றாவது கண் உண்டு என்பதைத் தெரிவிக்கிறது. ஹிரண்யகசிபுவை ஸம்ஹரிக்க அவதரித்த நரசிங்கப் பெருமானின் மூன்றாவது கண்ணை, சென்னை-செங்கல்பட்டு மார்க்கத்தில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலுள்ள ஸ்ரீநரசிம்மர் கோயிலில் காணலாம். திருப்பதியிலும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாளின் மூன்றாவது கண் திருமண்ணால் மறைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே பல விதத்திலும் நாம் ஆராயும் போது, மஹாவிஷ்ணுவுக்கு, முருகனுக்கு, ஐயப்பனுக்கு என அனைத்து தெய்வங்களுக்கும் மூன்றாவதாக ஒரு கண் உண்டு என்பதும், தெய்வங்களின் வலது கண் சூரியன்-பகல் வடிவமாகவும், இடது கண் சந்திரன- இரவு வடிவமாகவும், மூன்றாவது கண் பகல்+இரவு மற்றும் இரவு+பகல் ஒன்று சேரும் ஸந்தியா கால வடிவமாகவும் அமைந்துள்ளது என்பதும் தெரிகிறது. ஆனாலும், தெய்வங்களுக்கான இந்த மூன்றாவது கண்ணை பக்தர்களால் பார்க்க இயலாதவாறு ஒவ்வொரு கோயில்களிலும் பொதுவாக மறைக்கப்படுகிறது. சிவலிங்கத்துக்கு விபூதியினாலும், பெருமாளுக்கு நாமம் என்னும் திருமண்ணாலும், அம்மனுக்கு குங்குமத்தாலும் இந்த மூன்றாவது கண் மறைத்து அலங்காரம் செய்யப்படுகிறது, ஆகவே, பெரும்பாலான தெய்வங்களுக்கு நெற்றியில் கண் உண்டு.