பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
மேட்டுப்பாளையம் : சிறுமுகையில், பவானி ஆற்றிலிருந்து பண்ணாரி அம்மன் பக்தர்கள் குழுவினர் அலகு குத்தி, சக்தி கலசங்களை எடுத்து வந்தனர். சிறுமுகையில் பண்ணாரி அம்மன் பக்தர்கள் குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பூஜை வைபவங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன், 37ம் ஆண்டு பூஜைகள் தொடங்கின. நேற்று காலை பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களும், சக்தி கலசங்களும் அழைத்து வரப்பட்டன. அப்போது பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில், ராக்காச்சி அம்மன் கோவில், ராமநாகலிங்க கோவில் நிர்வாகிகள், எலகம்பாளையம், சிறுமுகை ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஆறு நாட்கள் திருவிளக்கு பூஜை உட்பட பல்வேறு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். வரும், 13ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறுமுகை மகாசக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.