பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
பழநி : தைப்பூசம், சபரிமலை ஐயப்பன் சீசன் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநிகோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் தைப்பூச விழா வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே மலைக்கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் காலை,மாலை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி குறைவாகவே உள்ளது. தனியார் கட்டண குளியலுக்கு ரூ.25 முதல் 30 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். மலைக்கோயில் செல்லும் பக்தர்களை திருஆவினன்குடி அருகே வழிமறித்து, கோயிலுக்கு அழைத்து செல்ல இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். தேங்காய்,பழங்கள், பேன்ஸி பொருட்கள், பொம்மைகள் அனைத்தையும் 50 சதவிதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். தைப்பூச விழா 10 நாட்களுக்கு மட்டும் அடிப்படை வசதிகளை நகராட்சி, கோயில் நிர்வாகம் செய்து தருகின்றன. தற்போது வரும் பக்தர்களுக்கு அந்த வசதி குறைவாக உள்ளதால் பழநி கோயிலுக்கு வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.