பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், பிப்., 1ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அதனால், இக்கோவிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய, நன்கொடையாளர் நிதியின் மூலம், கோவில் விமானம், திரிபுரசுந்தரி அம்மன் கோவில், விமானம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவு பெற்று உள்ளன. அதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்ய, கிராம முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்களுடன், அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம், பக்தவத்சலேஸ்வரர் கோவில் சர்வவாத்திய மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.