பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
ஊட்டி : ஊட்டி கத்தோலிக்க மறை மாவட்டம், கடந்த, 1955, ஜூலை, 3ம் தேதி உருவாக்கப்பட்டது. நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 62 பங்குகளை உள்ளடக்கிய மறை மாவட்டம் தனது, 60வது ஆண்டு வைர விழாவை கொண்டாடி வருகிறது. கடந்தாண்டு, ஜூலையில் துவங்கிய வைர விழா, வரும் மே மாதம் நிறைவு பெறுகிறது. நற்செய்தி அடிப்படையில் பண்புகளை வளர்த்து வாழ்வது; அவரவர் வயது, சூழ்நிலை, வாழ்க்கை நிலைக்கேற்ப அக்கறையுடன் திருச்சபையின் பணியில் பங்கேற்பது; குடும்ப உறவில் பினைப்புடன் இருப்பது போன்ற கருத்துகளை முன்னிறுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு கட்டமாக, ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயத்தில், நேற்று, நற்செய்தி மற்றும் நற்கருணை பெருவிழா நடந்தது. மதியம், 3:00 மணிக்கு, மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. பல்வேறு தேவாலயங்களைச் சேர்ந்த குருக்கள் பங்கேற்றனர். பின், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நற்கருணை பவனி நடந்தது; திரளானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலய பங்கு தந்தை ஜான் ஜோசப், பங்கு மக்கள் செய்திருந்தனர்.