திருமங்கையாழ்வார் புள்ளம் பூதங்குடி பெருமாள் கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்) வழியாக செல்லும்போது, அந்தக் கோயிலை கவனிக்காது சென்று கொண்டிருந்தார். அப்போது பெரும்ஜோதி எதிர்ப்பட்டது. அந்த ஜோதியின் வடிவில் சங்குசக்கரதாரியாக ராமபிரான் காட்சி தந்தார். அறிய வேண்டியவனை அறியாமல் சென்றதை எண்ணி வருந்தினார். அப்பெருமாளைப் பாசுரம் பாடும்போது, அறிவதறியான் அனைத்துலகும் உடையான் என்று தொடங்கும் பத்து பாசுரங்களைப் பாடினார். ஸ்ரீரங்கத்தைப் போலவே இத்தலமும் காவிரி மற்றும் கொள்ளிடத்திற்கு மத்தியில் உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் பிறந்த தலமான மண்டங்குடி இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன் சங்கு சக்கரங்களை ஏந்திய கோலத்தில் சயன கோலத்தில் ராமபிரான் காட்சி தருவது இங்கு மட்டுமே. இப்பெருமாளின் திருநாமம் வல்வில் ராமன் என்பதாகும். தன் தந்தையார் தசரதருக்குக் கூட செய்யாத கடமையான ஈமக்கிரியையை, ராமபிரான் இங்கு ஜடாயு என்னும் பறவைக்குச் செய்தார் என தலவரலாறு கூறுகிறது.