இறைவனின் திருநாமங்களை உள்ளம் உருகி தினமும் 108 முறை உச்சரிப்பது ஜபம் எனப்படும். அந்த நாமத்தையே ஒரு ஓலையிலோ, காகிதத்திலோ மனத்தூய்மையுடன் எழுதுவது லிகிதஜபம் எனப்படும். லிகிதம் என்றால் ஓலை. இதன் சக்தி மகத்தானது. பொதுவாக ராம ராம என்றோ, சிவ சிவ என்றோ, முருகா முருகா என்றோ பக்தர்கள் பகவந்நாமாக்களை (தெய்வப் பெயர்கள்) எழுதுவார்கள். குறிப்பாக ஸ்ரீராம ஜெயம் என்று எழுதுவது அதிகம். இறைவனும் அவன் நாமமும் வேறல்ல. இரண்டும் ஒன்றே என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால், இதை எழுதி முடித்தபின், அந்த நோட்டுகளை உபயோகம் அற்றதாகக் கருதுகின்றனர். பரணில் போட்டு கரையான் அரிக்க விட்டு விடுகின்றனர். சிலர் அந்நோட்டுக்களை குப்பையில் வீசி விடுகின்றனர். லிகித ஜபம் எழுதியவர் இறந்து விட்டால், அவர் எழுதிய நோட்டை சிதையோடு எரிக்கின்றனர். இவை தவறான நடைமுறைகளாகும். அதனால், சுவாமி நாமங்கள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை பூஜிப்பதும், பாதுகாப்பதும் நல்லது. லிகிதஜபத்தை புனிதநதிகளான கங்கை, யமுனை, காவிரி போன்ற நதிகளில் இடுவது, வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுக்கு கீழே வைப்பது சரியான முறையாகும். புதிய வீடு கட்டும் போது, அஸ்திவாரத்திலும் இதை புதைத்து வைப்பது இன்னும் உத்தமம். அந்த மந்திர சக்தி வாழையடி வாழையாக நம் குடும்பங்களை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் ராமர், விஷ்ணு கோயில்களில் மூலஸ் தான மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யும் போது, அவற்றின் அடியில் பக்தர்கள் எழுதிய லிகிதஜப நோட்டுகளை வைக்கும் முறையினைப் பின்பற்றி வருகிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசியில் ராம்நாம் பதி பாங்க் என்றொரு வங்கியை லிகித ஜபத்திற்காகவே ஏற்படுத்தி இருக் கிறார்கள். எந்த மொழியில் ராமநாமாவை எழுதினாலும் இங்கு ஏற்றுக்கொண்டு பாஸ்புத்தகம் கொடுக்கிறார்கள். பவித்திரமான பகவந்நாமாக்களை லிகிதஜபமாக எழுதி வருபவர்கள் தக்க சமயங்களில் இறையருளை பெற்று மகிழ்வார்கள் என்று அருளாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.