பதிவு செய்த நாள்
13
ஜன
2015
12:01
பெங்களூரு: மேல்கோட்டை செலுவநாராயண சுவாமியின் அபூர்வ கிரீடம், சங்கு, சக்கரம், தங்க அங்கி உள்ளிட்ட ஆபரணங்கள் திருடு போனதை, பாண்டவபுரா துணை பிரிவு அதிகாரி உறுதி செய்து, அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். செலுவநாராயண சுவாமியின் ஆபரணங்கள் திருடு போனது குறித்து, அறநிலையத் துறைக்கு புகார் வந்திருந்தது. அறநிலையத் துறை கமிஷனர், ஆபரணம் களவு போனது உண்மையா என்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தும்படி, துணை பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர், கோவிலில் ஆய்வு நடத்தி, நகைகள் காணாமல் போனதை உறுதிசெய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். செலுவநாராயண சுவாமி ஆபரணங்கள் திருடு போனது தொடர்பாக, 2013 ஜூலையில், அப்போதைய செயல் நிர்வாக அதிகாரி வேணுகோபால் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதன்பின், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில், துணை பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாகராஜ், கோவில் நிர்வாக அதிகாரி, அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தி, அறநிலையத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.