பதிவு செய்த நாள்
14
ஜன
2015
10:01
மேட்டுப்பாளையம் : சிறுமுகையில் இருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். சிறுமுகையில், பக்தர்கள் குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பொது பூஜை நடத்தி, பண்ணாரி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்தாண்டு, 37ம் ஆண்டு பூஜை, 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பவானி ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது. ஐந்து நாட்கள் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை கோவில் பூசாரி மகாலிங்கம், சக்தி விநாயகர் மற்றும் மகாசக்தி மாரியம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்தார். பின்னர், குருசாமி கேத்தப்பன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பாதயாத்திரையாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். பக்தர்கள் குழு தலைவர் புருஷோத்தமன், நிர்வாகிகள் கணேசன், பாலகிருஷ்ணன், ராமசாமி, சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு காலையில் சிட்டேபாளையத்திலும், மதியம் பகுடுதுறையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. பண்ணாரி அம்மனுக்கு பக்தர்கள் குழு சார்பில் பால் குடம், பூச்சட்டி, தீர்த்தக்குடம், சீர்வரிசை ஆகியவை நேர்த்திக்கடன் செலுத்தி, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்ய உள்ளனர்.