பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி, ஈஸ்வரன் கோயில்களில் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும்படி உணவருளிய லீலையான, காளபைரவ அஷ்டமி விழா நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நடந்த விழாவில், அதிகாலை 4 மணிக்கு மூலவர் சந்திரசேகர சுவாமிக்கும், விசாலாட்சி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.30 க்கு சந்திரசேகரசுவாமி பிரியா விடையுடனும், விசாலாட்சி அம்மன் தனித்தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர். மாலை 5 மணிக்கு திருத்தேர் கோயிலை அடைந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில்பஞ்சமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 க்கு சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியும் தனித்தனி தேரில் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தனர். தேர் பகல் 12 மணிக்கு கோயிலை அடைந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள்செய்திருந்தனர்.