பதிவு செய்த நாள்
14
ஜன
2015
10:01
உடுமலை பகுதியில், கால்நடை வளர்ப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பக்தர்கள் வழிபாடு நடத்தும், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில் (மாலகோவில்), வரும் 16ல் திருவிழா துவங்குகிறது; 18ல் நிறைவடைகிறது. சிவன் வடிவில் ஆல்கொண்டமால் : உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் அமைந்துள்ள இக் கோவில், பல நூற்றாண்டுகளுக்கு முன், முட்புதரால் சூழப்பட்டிருந்தது. இங்கிருந்த ஆலமரத்தில், கொடிய விஷப்பாம்புகள் வாழ்ந்து வந்தன; மரத்தின் கீழ், லிங்க வடிவிலான பாம்பு புற்று உருவாகியுள்ளது. புற்றுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ந்து வந்த மாடுகள், பாலை சொரிந்து அபிஷே கம் செய்துள்ளன. லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் தொடர்ந்து பால் சொரிவதை பார்த்த முன்னோர், ஆயர்பாடி கண்ணனின் மகிமை இது என கருதினர்.ஆலம் (விஷம்) உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால், அங்குள்ள திருமாலை, "ஆல்கொண்டமால் என்று மக்கள் வணங்கத் துவங்கினர். சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு, பால், வெண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து விவசாயிகள் வழிப்படத் துவங்கினர். ஆல்கொண்டமால் அருளில் கால்நடைகள் நோயின்றி வாழ்ந்ததால், பக்தர்களும், விவசாயிகளும் கோவிலுக்கு வந்து வழிபடத்துவங்கினர்.
மாட்டு பொங்கலும் மால் வழிபாடும் : சூரியன், சந்திரன், காற்று, நீர், ஆகாயம் ஆகியவற்றோடு, கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக, பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் சூரியனுக்கும், மறுநாள் விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் எருதுகளுக்கும் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பசுக்களுக்கும் கோமாதா பூஜை செய்து வருகின்றனர்.கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவையே, உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆல்கொண்டமால் கோவில் வழிபாடாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், தை 3, 4 மற்றும் 5ல் ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள், மாட்டுப்பொங்கலன்று, பசுக்கள் ஈன்ற கன்றுகளை கோவிலுக்கு தானமாக வழங்கி வருகின்றனர்.
வேண்டுதலும், நேர்த்திக்கடனும் : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், பசுக்கள் மற்றும் எருமைகள் மூலம் கிடைக்கும் பாலை கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்கின்றனர். கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை கால்நடைகளுக்கு தெளித்தும், திருநீறு பூசியும், துளசியை கால்நடைகளுக்கு உட்கொள்ளக் கொடுத்தும், அவற்றை நோய்களில் இருந்து பாதுகாத்து வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்க, வேண்டிக்கொள்ளும் விவசாயிகள், ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட உருவங்களை வைத்து வழிபடுகின்றனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாட்டு வண்டிகளில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இசைக்கு வசமாகும் சலங்கை மாடுகள் : ஆல்கொண்டமாலுக்கு காணிக் கையாக செலுத்தப்படும் கன்றுகளை "சலங்கை மாடு என்கின்றனர். ஆல்கொண்டமாலுக்கு சொந்தமானவை என்பதற்கு அடையாளமாக, கால்நடைகளின் காதுகளை சூலாயுதம் போல் வெட்டிவிட்டு, விலாப்புறத்தில் சூலாயுதம் முத்திரை பதிக்கின்றனர். இக்கன்றுகள், கோவில் வளாகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும். கட்டளைகளை புரிந்துகொண்டு, தாரை, தப்பட்டை, உருமி இசைக்கு ஏற்ப ஆடுவது சிறப்பு.
விவசாயிகளின் நம்பிக்கை : கோவில் வளாகத்தில் மாடுகளுக்கு தேவையான கயிறு, சாட்டை விற்கும் கடைகள் ஏராளமாக அமைக்கப்படுகின்றன. இங்கு வாங்கிச் செல்லும் கயிறுகளை, கால்நடைகளுக்கு கட்டினால், அவற்றுக்கு தீங்கு வராது என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள், தங்கள் மாடுகளுக்கான மூக்கு கயிறு, கழுத்துக்கயிறு, அழகுக்காக தயாரிக்கப்பட்ட கயிறு, தாம்பு கயிறு ஆகியவற்றை, விழாவின்போது புதிதாக வாங்கிச் செல்கின்றனர்.
கால்நடைகளுக்கு நன்றிக்கடன் : கடவுளர்களுக்கு நந்தி, குதிரை, எலி, சிங்கம் போன்றவை வாகனங்களாக அமைக்கப்பட்டிருக்கும். ஆல்கொண்டமால் கோவிலில், மிக பிரமாண்டமாக பசுக்கள், காளை, ஆடு ஆகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும், இக்கோவில் வழிபாட்டு முறை எடுத்துக்காட்டுகிறது.
கோவிலும், உற்சவரும் : ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்த கண்ணபிரான், பசுக்களை காக்கும் கடவுளாக திகழ்கிறார். தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், பித்தளை ஆகியவற்றை சரிசமமாகக் கொண்டு பஞ்சலோகத்தில், அழகான கலை அம்சத்துடன் பசுவுடன், புல்லாங்குழல் ஊதும் கோபாலகிருஷ்ணனை வடிவமைத்துள்ளனர். 15 அடி உயரத்துக்கு அமைத்துள்ள கொடிமரத்தில், கருட வாகனத்தில் மகா விஷ்ணு எழுந்தருளியிருக்கும் சிலை உள்ளது. மேலும், திருமாலின் அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகைக்கு மறுநாள், கொடிமரத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்படுகிறது. கோவில் முன், விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில், தன்னாசி சித்தர், ஆஞ்சநேயர், மகாமுனிக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு திருவிழா : இந்தாண்டு திருவிழா, வரும் 16 முதல் 18 வரை நடக்கிறது. 16 காலை 5:00க்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் விழா துவங்கும். 11:00க்கு சிறப்பு பூஜை, மாலை 6:00க்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜை நடக்கும். 17 காலை 5:00க்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, 11:00க்கு, சிறப்பு பூஜை நடைபெறும். 18 காலை 5:00க்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00க்கு, மகா அபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இரவு 7:00க்கு மகா தீபாராதனை, இரவு 9:00க்கு சுவாமி வீதியுலா, வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கும். வீதியுலா முடிந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை செய்ததும், திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவுக்கு சிறப்பு ஏற்பாடு : பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கென கோவில் அருகில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புக்காக, ஆண், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் கன்றுகள், கோசாலைகளுக்கு அனுப்பும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக பின் பற்றப்பட்டு வருவதால், கன்றுகளை காணிக்கையாக அளிக்கும் பக்தர்கள், ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. குடிமங்கலம் போலீஸ் சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.