பதிவு செய்த நாள்
14
ஜன
2015
10:01
கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நகைகள் குறித்த விபரங்களை முழுமையாக ஆவணப்படுத்துவதற்கு, இந்து அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும், இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் நிலங்கள், இடங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலர் எழுதி வைத்துள்ளனர். மேலும், சுவாமிக்கு அணிவிப்பதற்காக நகைகள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்களும் ஏராளமாக உள்ளன. இவற்றில் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாயாகும். இதற்கிடையில், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள் பலர், வாடகை செலுத்தாமல் உள்ளனர். மேலும், நில குத்தகைதாரர்கள் பலரும், குத்தகை தொகையை செலுத்தாமல் உள்ளதாக, இந்து அறநிலையத் துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, அனைத்து கோவில்களின் தனி அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினருக்கு, இந்து சமய நிறுவனங்களின் ஆணையர் குணசேகரன், குறிப்பாணை ஒன்றை கடந்த மாதம் அனுப்பினார்.
கோவில் இடங்களில் உள்ள வாடகைதாரர்கள், குத்தகைதாரர்களிடம் இருந்து மனை வாடகை, கடை வாடகை பாக்கி, நில குத்தகை பாக்கி என, அனைத்து தொகையையும் உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என, ஆணையில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலும், வாடகை, குத்தகை பாக்கி விபரங்கள், வசூலிக்கப்பட்ட தொகை தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தயாரித்து, இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில், கோவில் சொத்தை நிர்வகிக்கும் அறங்காவலர் குழு, தனி அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஆணையர் அதிரடியாக எச்சரித்து இருந்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. வாடகை, குத்தகை பாக்கித் தொகையில் 70 சதவீதம் அளவுக்கு வசூலாகி விட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஒவ்வொரு கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முழுமையாக ஆவணப்படுத்துவதற்கு, இந்து அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்த பின், இந்த விபரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக, இணையதளத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.