விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மனிதனாகப் பிறந்து தர்மவழியில் வாழ்ந்து தானே எடுத்துக்காட்டாக நமக்கு வாழ்ந்து காட்டிய அவதாரம். மற்ற அவதாரங்களில் எல்லாம் மாயாசக்தி விஷ்ணுவோடு இணைந்தே இருக்கும். ஆனால், இந்த அவதாரத்தில் எளிமையாக சாதாரண மனிதர்களைப் போல இரு திருக்கரங்களோடு மட்டுமே ராமபிரான் வாழ்ந்தார். கோயில்களிலும் இருகரங்களோடு தான் ராமனை தரிசிக்க முடியும். விதிவிலக்காக நான்கு கரங்களைக் கொண்ட ராமனின் சிலை செங்கல்பட்டில் இருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள பொன்பதர் கூடத்தில் உள்ளது. மேல் இருகரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபயவரத முத்திரைகள் காட்டியும் வில்லேந்தி சேவை சாதிக்கிறார். வலப்புறத்தில் சீதாப்பிராட்டியும், இடப்புறத்தில் லட்சுமணனும் இருக்கிறார்கள். அனுமன் வலக்கரத்தால் வாய்பொத்தியபடி அடக்கத்தோடு நிற்கிறார். தேவராஜன் என்ற முனிவருக்காக ராமன் நான்கு கரங்களோடு காட்சி தந்ததாக ஸ்தலபுராணம் கூறுகிறது.