பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் பாரம்பரியத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணைந்து சமத்துவ பொங்கலாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.இந்தாண்டும், பொங்கல் விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் போகிப்பண்டிகையையொட்டி, வீடுகளின் முன்பு, பூளைப்பூ, பிரண்டை, ஆவாரம், தும்பை, வேப்பிலை அடங்கிய காப்பினை கட்டி, பொங்கல் விழாவை வரவேற்றனர்.நேற்று, இயற்கையின் பேராற்றல் வடிவமான சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். வீடுகளில், பொங்கல் பானைகளில், பொங்கல் வைத்து, பொங்கி வருவதை கண்டு, பொங்கலோ... பொங்கல் என சிறுவர்கள் கோஷமிட்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல் வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இன்று, உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் விழா நடக்கிறது.இதற்காக, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். மேலும், விளைநிலங்களில், பட்டி அமைத்து, மாட்டுப்பொங்கலை கொண்டாட விவசாயிகள் தயராகி வருகின்றனர். தொடர்ந்து, நாளை பூப்பொங்கல் விழாவும் நடக்கிறது.