கும்பகோணத்துக்கு அருகில் உள்ள குடவாயிலில் அருள்பாலிக்கிறார் கோணேசுவரர். தன் தாயின் அடிமைத்தளையை நீக்க, கருட பகவான் தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்துடன் வந்தபோது, இடையில் அசுரன் வழி மறிக்க, அமிர்த கலசத்தை அருகில் இருந்த புற்றின் மீது வைத்து விட்டு அசுரனோடு போரிட்டு வென்றார் கருடன். அதற்குள் கலசம் புற்றுக்குள் சென்று மறைந்தது. புற்றைக்கிளறி அமிர்த கலசத்தை எடுக்க முயன்ற கருடனுக்கு அமிர்த கலசத்தைத் தந்ததோடு, தாயை மீட்கவும் அருள்பாலித்தார் சிவபெருமான். அமிர்த குடம் வெளிப்பட்டதால் இவ்வூர் குடவாயிலாயிற்று. தாயின் ஆசையை நிறைவேற்றிவைக்க முடியாமல் வருந்துபவர்கள் இத்தல சிவபெருமானை வணங்கி மன அமைதி பெறுகிறார்கள்.