நாகர்கோவில் : 32 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் தேவி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெற்றது.பத்தாம் நாள் விழாவில், தெப்பத்திருவிழாவும், ஆராட்டும் நடைபெற்றது. கோயிலின் வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் அடைபட்டு கிடந்தது. இதனால், தண்ணீர் வராமல் கடந்த 32 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சிவசேனா, அதற்கான நடவடிக்கையில் நேரடியாக இறங்கியது. அமைச்சர் பச்சைமாலும் இதற்காக முயற்சியில் கை கொடுக்க, குளத்துக்கு தண்ணீர் வந்தது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்பத்திருவிழாவிற்கு பின், தேவி முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு முடிந்து கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.