திருவண்ணாமலை : "பவுர்ணமி தினத்தில் சந்திரகிரகணம் வருவதால், கர்ப்பிணி பெண்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் அறிவுறுத்தி உள்ளனர்.திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர். இந்த மாத பவுர்ணமி, இன்று (ஜூன் 15) அதிகாலை 3.52 மணிக்கு துவங்கி 16ம் தேதி அதிகாலை 2.29 மணிக்கு முடிவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று (ஜூன் 15) இரவு பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இன்று இரவு 11.53 மணிக்கு சந்திரகிரகணம் துவங்கி நாளை அதிகாலை 3.33 மணி வரை நீடிக்கிறது. பவுர்ணமி நாளில் சந்திரகிரகணம் வருவது விசேஷமானது. இந்த நாளில் சிவ நாமத்தை உச்சரித்தப்படி கிரிவலம் செல்வோருக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இது, சிவ அருளால் ஏற்படும் ஆபூர்வ நிகழாகும்.சந்திர கிரகணம் முடிந்ததும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம குளத்தில் தீர்த்தவாரி நடக்கும். கோவில் நடை திறப்பு பூஜைகள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. "பவுர்ணமியின் போது சந்திரகிரகணம் ஏற்படுவதால், இம்முறை கர்ப்பிணி பெண்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என, அருணாச்சலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.