பதிவு செய்த நாள்
21
ஜன
2015
12:01
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில், தை அமாவாசையொட்டி, பக்தர்கள் புனித நீராடி, திருமணக் கோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரரை வழிபட்டனர். கோடியக்கரை சித்தர் கட்ட கடலிலும், வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்திலும், தை அமாவாசை நாளான நேற்று, இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுத்தனார். பின்னர் அவர்கள் கடலில் புனித நீராடினர்.
தஞ்சை, நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரைக்கு தை அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள், அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டன. பாதுக்காப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி ஆசைத்தம்பி, தலைமையில் செய்திருந்தனர். மாலை, தை அமாவாசையையொட்டி, வேதாரண்யேஸ்வரர் கோயிலில், லட்சதீபம் ஏற்றும் விழாவில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி வழிபட்டனர்.
* தஞ்சை அடுத்த திருவையாறு காவிரி கரையில் அதிகாலை முதலே ஏராளமானவர்கள் குவிந்து புனித நீராடியபின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதுபோன்று ஆதிராம்பட்டிணம், அம்மாபட்டிணம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் ஏராளமானோர் புனித நீராடியபின் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நீர்நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளில் வைத்து தர்ப்பணம் செய்துகொண்டனர். மேலும் தை அமாவாசையை முன்னிட்டு தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.
* கும்பகோணம் மகாமக குளம் புனித தலமாகும். தை அமாவாசையையெட்டி, நேற்று காலை, ஏராளமான பொதுமக்கள் குளத்தில் குளித்து, குளக்கரையில் அமர்ந்து, தங்களது மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல், காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, கரப்படித்துறைகளிலும், பொதுமக்கள் கூடி தர்ப்பணம் கொடுத்தனர்.