பதிவு செய்த நாள்
22
ஜன
2015
12:01
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நாள்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிசம்பர், 21ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா துவங்கி, ராப்பத்து, பகல் பத்து நிகழ்ச்சி, சொர்க்கவாசல் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், ரங்கநாதர் கோவிலில், நேற்று காலை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ஜெயராமன் முன்னிலையில், கோவில்களில் இருந்த, 40க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 80 லட்சத்து, 19 ஆயிரம் ரொக்கம், 100 கிராம் தங்கம், ஒரு கிலோ, 80 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். வழக்கமாக, 40 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றதால், தற்போது, 80 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.