பதிவு செய்த நாள்
27
ஜன
2015
12:01
திருப்பூர் : வாலிபாளையம் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் வாலிபாளையத்தில், பழமையான வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மூலவராக கல்யாண கோலத்தில் சுப்ரமணியர், வடக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். தவிர, விநாயகர், பெருமாள், சிவன் சன்னதிகள், தனித்தனியே உள்ளன. பழமையான இக்கோவிலில், திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம், மூலவர் விமானம், பரிவார மூர்த்திகள் சன்னதி, கோபுரங்கள் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளன.நேற்று காலை 6:00 மணிக்கு, 6ம் கால யாக பூஜை, நிறைவேள்வி நடந்தது. காலை 9:05க்கு, யாத்ர தானம், கடம் புறப்பாடு நடந்தது. 9:45க்கு, பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, அபிஷேகம் நடைபெற்றது. ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. மாலை 5:00க்கு திருக்கல்யாண உற்சவம், வீதி உலா நடைபெற்றது.சஷ்டி சேவா அறக்கட்டளை தலைவர், துணை மேயர் குணசேகரன், செயலாளர் சிவசுப்ரமணியம், துணை செயலாளர் சடையப்பன், பொருளாளர் ராம்குமார் பாலாஜி, கோவில் தக்கார் வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் வக்கீல் ஸ்ரீராம், வரதராஜ், கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.