நாகை மாவட்டம், திருக்கடையூருக்கு அருகேயுள்ள செம்பனார் கோயிலில் வள்ளி- தெய்வானை சமேதராக பன்னிரண்டு கரங்களில் ஆயுதங்களுடன் மயிலின் மீதமர்ந்து காட்சி தருகிறார் முருகப்பெருமான். பொதுவாக முருகனுக்கு வலப்புறம் நோக்கி நிற்கும் மயில் இங்கு இடப்புறம் நோக்கி நிற்பது விசேஷம். இத்தல முருகப்பெருமான் தமது ஆறுகிரீடங்களிலும் முறையே பிரம்மன்- சரஸ்வதி, விஷ்ணு- லட்சுமி, பரமேஸ்வரன்-பார்வதி ஆகியோரின் சக்தியைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவரை வணங்கினால் இம்மூர்த்திகளையும் முப்பெருந்தேவியரையும் வழிபட்ட பலன் கிட்டும். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் வள்ளி நாயகியுடனும், ஒரு நாள் தெய்வானையுடனும் முருகப் பெருமான் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறெங்குமே இல்லாத தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஐம்பெரும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். அவருக்கு மஞ்சள் நிற பட்டாடை, மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும்; நீலநிற மலர்கள் நீலநிற ஆடைகள் அணிவித்து திருமாலாகவும்; சிகப்பு நிற மலர்கள் அணிவித்து அரனாகவும்; வெண்நிற மலர்கள், வெண்பட்டு அணிவித்து மகேசனாகவும்; பச்சை நிற ஆடை சாத்தி, சதாசிவனாகவும்; வணங்கப்படுகிறார். இங்கு தினந்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்துக்கால பூஜை நடைபெறுகிறது.