பதிவு செய்த நாள்
30
ஜன
2015
12:01
சிதம்பரம்: பொது தீட்சிதர்களில் ஒருவரான கனகசபேச தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு திருப்பணி கமிட்டி அமைக்கவில்லை என்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சிதம்பரம் சப் - கலெக்டர் அரவிந்த், பொது தீட்சிதர்கள் செயலர் பாஸ்கர தீட்சிதருக்கு விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள நோட்டீஸ் விவரம்:கடந்த ஆண்டு ஜன., 6ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் நடராஜர் கோவிலுக்கான, பழைய 1894ம் ஆண்டு சட்டம், தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகள், எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், அப்படியே அமலில் உள்ளன.ஆனால், கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், அதன் செயலர் பாஸ்கர தீட்சிதரிடம் நிர்வாகக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடந்த, 12ம் தேதி சிதம்பரத்தைச் சேர்ந்த கனகசபேச தீட்சிதர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த மனுவை பொது தீட்சிதர் செயலர் நிராகரித்து விட்டதாகவும், மேலும், கடந்த, 26ம் தேதி நடந்த கோவில் பிரகார சன்னிதிகளுக்கான கும்பாபிஷேகம் மற்றும் வரும் மே 1ம் தேதி நடக்கும் நடராஜர் கும்பாபிஷேகத்திற்கும் திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என, மனுவில் தெரிவித்துள்ளார். மனுவின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மனு மீதான நடவடிக்கைகள் குறித்த தங்களது அறிக்கையில், கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டி அமைத்தது தொடர்பான தங்களது அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சப் - கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.