பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
ஆட்டையாம்பட்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேர்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சேலம், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவை காண மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள், காளிப்பட்டிக்கு வந்து தேர்த்திருவிழாவை கண்டு செல்வர். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு மயில் வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இன்றும், நாளையும் (ஃபிப்., 1ம் தேதி) ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஃபிப்., 2ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது, இதையடுத்து கல்யாண வைபோகமும், ஸ்வாமி திருத்தேருக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஃபிப்., 3ம் தேதி காலை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான அம்பிகாபதி முன்னிலையில், பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து, கோவிலை சுற்றி இழுத்து வருவர். 4ம் தேதி சந்தன காப்பு அலங்காரம், திருவீதி உலா நடக்கிறது. ஃபிப்., 5ம் தேதி, இரவு மின் அலங்காரம் மற்றும் புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி சத்தாபரண மகாமேரு நிகழ்ச்சி நடைபெறும். அது சமயம் கோவில் சார்பில், சிறப்பான வாண வேடிக்கை நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதி கருதி சிறப்பு தரிசன வசதியும், அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலரும் மற்றும் பூசாரியுமான அம்பிகாபதி, செயல் அலுவலர் முத்துசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.