மதுரை: அமெரிக்கா, இங்கிலாந்தில் வேதாந்த பிரசாரம் முடித்து விட்டு 118 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் மதுரையில் சுவாமி விவேகானந்தர் பேசினார்.
சகோதர, சகோதரிகளே என்ற தன் பேச்சின் மூலம் உலக தலைவர்களை ஈர்த்த விவேகானந்தர், 1897 ஜன., 26ல் கப்பலில் சீடர்களுடன் ராமேஸ்வரம் பாம்பன் குத்துகால் பகுதி வந்தார். அதை நினைவுபடுத்தும் வகையில் அங்கு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. பின் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக சொற்பொழிகளை நிகழ்த்தியவாறு விவேகானந்தர் மதுரைக்கு பிப்., 2ம் தேதி காலை 10.30 மணிக்கு வந்தார். அப்போதெல்லாம் கார் போன்ற வாகனங்கள் அதிகம் இல்லை. அவர் சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார்.
மன்னர் மாளிகை:
மதுரையில் ராமநாதபுரம் மன்னரின் மாளிகையான ராமகோடியில் தங்கினார். இந்த மாளிகை இருந்த இடத்தில் தற்போது தியாகராஜர் கலை அறிவியல் கல்லுாரி இருக்கிறது. மதுரையில் சந்தித்தபிரமுகர்கள், பண்டிதர்களுடன் தத்துவ விவாதங்களில் விவேகானந்தர் ஈடுபட்டார். பின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அம்மன், சுவாமியின் திருவாபரணங்கள், வஸ்திரங்களையும் அவர் பார்வையிட்டார்.பின் நேடிவ் காலேஜ் சென்றார். தற்போது மதுரை கல்லுாரி மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்ள இடத்தில் தான் நேடிவ் காலேஜ் செயல்பட்டது. அங்கு விவேகானந்தர் பேச்சை கேட்க 2000 பேர் குழுமியிருந்தனர். மதுரை வாழ் இந்துக்கள் சார்பில் வெல்வெட் உறையில் வரவேற்புரை பத்திரம் வழங்கப்பட்டது. கவர்ந்த காந்தப் பேச்சு: நாம் அறிய வேண்டியவை தலைப்பில் அன்று விவேகானந்தர் பேசியதாவது:மிகப்பெரிய வெற்றிகள் மூலம் அல்லது வாணிப ஆதிக்கத்தின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு, மனித குலம் முழுவதும் ஒன்றுபடும் போது ஒவ்வொரு நாடும் தன் பங்கை செலுத்த வேண்டியிருக்கிறது.
அரசியல், சமுதாயம், ஆன்மிகம் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் உலகில் ஒரு குறிப்பிட்ட பங்குள்ளது.
ஒட்டுமொத்த மனித அறிவிற்கும் இந்தியாவின் பங்கு ஆன்மிகமும் தத்துவமும் ஆகும். இதை பாரசீக சாம்ராஜ்யம் தோன்றுவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு முறை இந்தியா உலகிற்கு வழங்கியது.மேலை நாட்டு போக வாழ்க்கை நாகரிகத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. அதைப் போலவே இந்தியாவின் ஆன்மிக வெள்ளத்தையும் மேலை நாட்டு மக்களால் தடுத்து நிறுத்த முடியாது.சமுதாயம் என்றாவது நிறைநிலையை அடையுமா என்பது சந்தேகம் தான். அது வருகிறதோ இல்லையோ நாம் ஒவ்வொருவரும், அது நாளைக்கு வரப்போகிறது, அது நம் உழைப்பால் மட்டுமே வர முடியும் என்ற எண்ணத்துடன் உழைக்க வேண்டும்.மகான்கள் வருவார்கள். அவர்கள் அந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப சமுதாயத்தை மாற்றி மேன்மேலும் நல்ல வழிகளிலும் கடமைகளிலும் செலுத்துவார்கள்.உலகிலுள்ள வேறு எந்த நாட்டினரை விடவும் நாம் முற்போக்குடன் இருப்போம்.
அதே சமயத்தில் நாம் நமது ஆன்மிக பரம்பரை பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம். இவ்வாறு அவரது பேச்சு அமைந்தது.
வரவேற்க வந்த சீடர்: ராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர் சுவாமி சிவானந்தர். அவர் விவேகானந்தரை அழைத்து செல்ல கோல்கட்டாவிலிருந்து அன்று மதுரை வந்திருந்தார். அன்றிரவே விவேகானந்தர் அவர்களுடன் ரயில் மூலம் கும்பகோணம் சென்றார்.