பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
கோவை : கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், அரோகரா கோஷம் முழங்க, தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது.
கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், கடந்த, 31ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. ஈஸ்வரன் கோவிலில் உள்ள, சண்முக சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. கடந்த, 1ம் தேதி, வெள்ளி மயில் சப்பரத்தில் எழுந்தருளிய, சண்முக சுப்ரமணியர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம், சண்முக சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன சப்ரத்தில், சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, சண்முக சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சமேதராக, தேரில் எழுந்தருளினார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாட்டு முடிந்ததும், தேரில் உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை செய்யப்பட்டது. அதன்பின், காலை, 10:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.
பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், மேயர் ராஜ்குமார், மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணன், பணிக்குழு தலைவர் அர்ஜூனன், அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, என்.எச்.ரோடு, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக, அரோகரா கோஷம் முழங்க, வடம் பிடிக்கப்பட்ட தேர், மதியம், 1:30 மணிக்கு சன்னதியை அடைந்தது. ஒவ்வொரு இடத்திலும், தேர் நிலை நிறுத்தப்பட்ட போது, தீபாராதனை வழிபாடு நடந்தது. தேருக்கு முன்பாக, கோவில் பஜனை குழுவினர், முருகன் பக்தி பாடல்கள் பாடிச்சென்றனர்.தைப்பூச தேரோட்டத்தை ஒட்டி, கோட்டை மேடு முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வீதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.