பதிவு செய்த நாள்
04
பிப்
2015
01:02
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி, இருமுடி விழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த டிசம்பர், 10ம் தேதி, இருமுடி விழா துவங்கி, நேற்று முன்தினம், நிறைவடைந்தது.
தைப்பூச ஜோதி பெருவிழா நேற்று துவங்கியது. இதற்காக, அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை, 3:30 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:35 மணிக்கு, கோ பூஜையும் நடந்தது. மூல விளக்கை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகள் ஏற்றிவைத்தார். தைப்பூச ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். பங்காரு அடிகள் வீட்டில் இருந்து, தைப்பூச ஜோதி ஊர்வலம் துவங்கி, தைப்பூச ஜோதி மேடை அருகில் முடிந்தது.
பாரம்பரிய கிராமியக்கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, தைப்பூச ஜோதியை பங்காரு அடிகள் ஏற்றி வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம், முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.