தேவிபட்டினம் நவபாஷாண கடலில்பரிகார பூஜைக்கு கட்டணம் நிர்ணயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2015 11:02
தேவிபட்டினம்:ராமநாதபுரம் தேவிபட்டினம் நவபாஷாண கடலில் நடத்தப்படும் பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடலுக்குள் நவபாஷாணம் எனும் நவக்கிரகங்கள்அமைந்துள்ளதாலும், ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இடம் என்பதாலும் தேவிபட்டினம் சிறப்புபெற்று விளங்குகிறது.
இங்கு முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன்கழிக்க, தர்ப்பணம் ஆகியவைகளுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் நவக்கிரக தோஷங்கள், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
இதற்காக தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்களிடம் புரோக்கர்கள் பரிகார பூஜைகளுக்கு ஏற்ப 2000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அடாவடி வசூல் செய்து வந்தனர். இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக கலெக்டர் நந்தகுமாரின் உத்தரவுப்படி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பக்தர்கள் இந்திரஜித், ராஜேஷ் பிரபு கூறுகையில்,பரிகார பூஜைகளுக்கு புரோக்கர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கும் நிலை இருந்தது. தற்போது வைக்கப்பட்டுள்ள கட்டண விபரபட்டியலால் ஒவ்வொரு பூஜைக்கும் எவ்வளவு கட்டணம் என அறிய முடிகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் பரிகார பூஜைகள் செய்யும் உண்மையான அர்ச்சகர்கள் யார் என பக்தர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உடை வழங்க வேண்டும்,” என்றனர்.