தனுஷ்கோடியில் செய்ய வேண்டிய ஒரு சடங்கு உள்ளது. இங்கு செய்யப்படும் நீராடுதல் மலவிமோசனஸ்நானம் என அழைக்கப்படுகிறது. ஆணவம், கன்மம், மாயை என்ற 3 அக-மலங்கள் இங்கு நீராடுவதால் நீக்கப்பட வேண்டியவை.இந்த தீர்த்தத்தில் நீராடுகிறவர்கள் நீர்நிலைகளை பாதுகாக்கும் தேவதைகளை நோக்கி வழிபட வேண்டும். அவற்றுக்கு அர்ப்பணமாக மண்ணை அளிக்க வேண்டும். இந்த மண்ணை ஏற்று தன்னை நீராட அனுமதிக்க வேண்டும் என நீரைக் காக்கும் தேவதையிடம் அனுமதி வேண்டிய பின் நீராட வேண்டும்.தனுஷ்கோடி, அக்னி, நவபாஷாணம், தர்ப்பசயனம் ஆகிய தீர்த்தங்களில் எல்லாம் இந்த சடங்கு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
2004ல் சுனாமி ஏற்பட்ட போது ராமேஸ்வரம் பாதிப்பின்றி தப்பித்தமைக்கு காரணம் இங்குள்ள மண் படுகைகளாலும் அவற்றில் உருவாகி இயற்கை அரணாக அமைந்திருக்கும் பவளப்பாறைகளாலும் தான். இங்கு ஆக்ரோஷமான அலைகள் வராமல் இருப்பதும் அதனால் தான். பலவித மீன்கள் உயிரினப் பெருக்கம் செய்ய காரணம் இந்த பவளப்பாறைகள். சேது தீர்த்த யாத்திரை என்பது ஏறக்குறைய ராமநாதபுரம் முழுவதையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த தீர்த்த யாத்திரையின் நிலவரையியலை விளக்கமாக கூறுவது அனந்தராமாயணம். யுத்த காண்டத்தில் ராமநாதபுரம் பகுதியை ராமரின் பாதையுடன் இணைத்து கூறப்பட்டுள்ள விவரம் ஒரு தேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக அமைகிறது. இந்த ஐதீகத்தின்படி போருக்கு பின் ராமரே, ராமேஸ்வர பகுதியில் தீர்த்தயாத்திரை மேற்கொண்டார்.உப்பூரில் தன் கையால் நிறுவிய (வெயிலுகந்த பிள்ளையார்) விக்னேஸ்வரரை வழிபட்ட ராமர் பின் நவபாஷாணத்தில் நீராடினார். பிறகு தேவிபட்டினம் வேதாள தீர்த்தத்தில் நீராடினார்.
பின் கடலை கடந்து பாம்பனில் பைரவதீர்த்தத்தில் நீராடினார். அதன் பிறகு தமக்கே ஏற்பட்ட ஏகாந்த (ராமர்) கோவிலை அடைந்தார். ராமதீர்த்தத்தில் நீராடி பின்னர் அக்னிதீர்த்தத்தில் நீராடினார். தனுஷ்கோடியில் தன் வில்லால் கோடி தீர்த்தத்தை உருவாக்கினார். ஸ்வேதமாதவ கோவிலில் சென்று அவர் தோஷங்களை நீக்கும் பூஜைகளை செய்தார். இன்று சேதுமாதவன் என அழைக்கப்படும் இந்த சுவாமியின் உண்மை பெயர் ஸ்வேதமாதவன் என்பதாகும். ஸ்வேத என்றால் வெள்ளையான என்று பொருள். வெண்பவளப்பாறையால் செய்யப்பட்ட மூர்த்தி என்பதால் ஏற்பட்ட இந்த பெயர் இந்த ஊரின் தனிப்பெருமையான சேது என்பதுடன் மருவி சேதுமாதவன் என வழங்கலாயிற்று. யாத்திரிகரின் புனிதபயணம் முடிவுறும் இடம் தான் அக்னி தீர்த்தம். ராமலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் இந்த தீர்த்தம் உள்ளது. மகாலக்ஷ்மி தீர்த்தத்துக்கு அருகில் இந்த தீர்த்தம் மைந்துள்ளதாக கூறுகிறது புராணம். -சுப்பிரமணிய பிள்ளை, பேராசிரியர்(ஓய்வு)