பதிவு செய்த நாள்
18
பிப்
2015
12:02
திருத்தணி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் மற்றும், 1008 சங்காபிஷேகம் நடந்தன.
திருத்தணியில்: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, மகா சிவராத்திரியை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு, யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு முதல் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு, இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இரவு 11:00 மணிக்கு, மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
நள்ளிரவு 12:00 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை 4:00 மணிக்கு, மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.
பாரிமுனை, தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வடஇந்தியர்களால் வைத்து, வழிபாடு நடத்தப்படும் சிவலிங்கத்திற்கு, நேற்று அதிகாலை முதல், மாலை வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு, தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தும், வில்வ மலர்களால் அர்ச்சித்தும் வழிபட்டனர்.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த சிவராத்திரி பூஜையில், 1008 சங்காபிஷேகமும், ஹோமம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டன.
60 வகை மலர்கள்: வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் வடை, பாயாசத்துடன் சிறப்பு அன்னதானம் நடந்தது. எம்.கே.பி.நகர் ஆதீஸ்வரர் கோவில், சோமநாதஈஸ்வரர் கோவில்களில், 60 வகை மலர்கள் மற்றும் பஞ்சகவ்ய அபிஷேகம் நடந்தது.
ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர், சிவராத்திரி விழாவை ஒட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு, சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிற்பகல் 1:00 மணிக்கு விபூதி அலங்காரத்திலும், மாலை 5:00 மணிக்கு வெற்றிலை காப்பு, நள்ளிரவு 12:00 மணிக்கு நவக்கிரக அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வீராணத்துார் கிராமத்தில், ஞானாம்பிகை உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு நேற்று காலை முதல், சிவராத்திரியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணி முதல், நான்கு கால பூஜை மற்றும் பஜனை நடந்தது.
மூலவருக்கு, சாற்றுவதற்காக, வேலுார் மற்றும் பெங்களூரில் இருந்து, 1,000 கிலோ பூக்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன. நேற்று காலை முதல், மாலை வரை, திரளான பெண்கள், இந்த பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில்தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
மேலும், சிலர் மாவிலை மற்றும் தாழம்பூ தோரணங்களால் கோவில் வளாகத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.