பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த எய்யலூர் கொள்ளிடக்கரையில் ராமர் வணங்கிய, வரலாற்று சிறப்புடைய சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த எய்யலூர் கொள்ளிடக்கரையில், மங்களாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராமர், லட்சுமணன், சீதையைத் தேடி, காட்டு வழியாக சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் சென்றது. உடன், கொள்ளிடக்கரையில் அபூர்வ மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை வணங்கி, ஆற்றின் குறுக்கே அம்பு எய்தார். உடன், ஆற்றின் வெள்ளம் வடிந்து வழியை ஏற்படுத்தி ஆற்றை கடந்தார் என்பது வரலாறு. ராமர் அம்பு எய்ததால் அந்த ஊருக்கு எய்த ஊர் என்றும், நாளடைவில் மருவி எய்யலூர் ஆனது. ராமாயண காலத்து மரம், இக்கோவிலில் இன்றைக்கும் உள்ளது. குழந்தை பாக்கியம், திருமண தடை தீர்க்கும் அற்புத மரமாக இம்மரம் உள்ளதாகவும், மங்களாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரரை வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் கட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், சென்னை திருப்பணிச்செம்மல் மகாலட்சுமி சுப்ரமணியன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உதவியுடன், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2009ம் ஆண்டு திருப்பணிகள் துவக்கப்பட்டு கோவில் கருவறை, விமானம், முன்மண்டபம், தாயார் சன்னிதி ஆகியன கட்டி முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. அன்று இரவு 7 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 5 மணிக்கு மூன்றாம் யாகசாலை பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. காலை 11 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிவராம தீட்சிதர், சுப்ரமணிய தீட்சிதர், தியாகப்பா தீட்சிதர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வைத்தனர். ஏற்பாடுகளை எய்யலூர் மங்களாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கைங்கர்ய சபாவினர் மற்றும் திருப்பணி செம்மல் மகாலட்சுமி சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.