பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
திருக்கோவிலூர் : திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா, அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் மகா கும்பாபிஷேக ஏழாம் ஆண்டு நிறைவு விழா, அடுத்த மாதம் 8, 9ம் தேதிகளில் நடக்கிறது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, 8ம் தேதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், ஸ்ரீ முரளீதர சுவாமிஜி நுழைவு வளைவு திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஜஸ்டிஸ் அருணாசலம் எழுதிய, "என் குருவின் புனித திருவடிகளில் என்ற ஆங்கில நூலின் இரண்டாம் பாகத்தை, நித்யானந்தகிரி சுவாமிகள் வெளியிட, முரளீதர சுவாமிகள் பெற்றுக் கொள்கிறார். தமிழ்ப் பதிப்பை முரளீதர சுவாமிகள் வெளியிட, நித்தியானந்தகிரி சுவாமிகள் பெற்றுக் கொள்கிறார். அன்னை விஜயலஷ்மி எழுதி, மூர்த்தி ஈஸ்வர அய்யா கன்னடத்தில் மொழிபெயர்த்த அன்பின் அலைகள் புத்தகத்தை, முரளீதர சுவாமிகள் வெளியிட, மூர்த்தி ஈஸ்வரன் பெற்றுக் கொள்கிறார். காலை 10.30 மணிக்கு பகவானுடன் பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.15 மணிக்கு சிவகாசி பகவான் யோகி ராம்சுரத்குமார் சேவா டிரஸ்டைச் சேர்ந்த குழந்தைகளின் நாடகம், மாலை 6.30 மணிக்கு முரளீதர சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாளான 9ம் தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு பக்தர்களின் பஜனை, காலை 4 மணி, மாலை 5.30 மணிக்கு ராம்ஜி பஜனை குழுவினரின் பஜனை, மாலை 6 மணிக்கு மதுரை ஸ்ரீமதி கோமதி குழுவினரின் வில்லுப்பாட்டு, இரவு 7.45 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.