திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாசி மாத தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாசி மாத அமாவாசையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கியிருந்தனர். நேற்று காலை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மூலவர் தரிசனம், காலை 5:00 மணிக்கு துவங்கியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். பின்னர் மாலை உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தெப்ப உற்சவம்: மூன்றுநாள் தெப்ப உற்சவம் நேற்று மாலை, 7:00 மணி அளவில், ஹிருத்தாபநாசினி குளத்தில் துவங்கியது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவர் தெப்பத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரண்டாவது நாளாக தெப்ப உற்சவம் நடக்கிறது. மூன்றாவது நாளாக, நாளை தெப்ப உற்சவம் நிறைவடைகிறது.