பதிவு செய்த நாள்
23
பிப்
2015
12:02
திருத்தணி: கிருஷ்ணர் கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில், உள்ள குடிகுண்டா கிராமத்தில், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிராம வாசிகள் திருப்பணிகள் நடத்தி, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடத்தினர். இதற்காக, நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள் அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு, நான்கு காலபூஜையும், கலச ஊர்வலமும் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, புதிதாக அமைத்த விமானத்தின் மீது, புனிதநீர் ஊற்றி மகா கும்பாபி÷ ஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வீதியுலா நடந்தது. விழாவில், குடிகுண்டா, எஸ்.அக்ரஹாரம் உட்பட அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.